கால்நடைகளை அலங்கரிக்கும் அணிகலன்கள் விற்பனை ஜோர்
பொள்ளாச்சி;மாட்டுப் பொங்கல் நெருங்கும் நிலையில், 'ரேக்ளா' மாடுகள், கறவை மாடுகள் என கால்நடைகளை அலங்கரிக்கும் வண்ணக் கயிறுகள், சலங்கை, ஜிமிக்கி அணிகலன்கள் சந்தையில் விற்பனைக்கு குவிந்துள்ளன.பொங்கல் பண்டிகையானது போகி, சூரிய பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என ஒவ்வொரு நாளும் தனி சிறப்பை கொண்டுள்ளது.மாட்டுப் பொங்கலானது விவசாயத்துக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தி, பொங்கல் வைத்து, கால்நடைகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகளுக்கும் வழங்கப்படுகிறது.அன்றைய தினம் கால்நடைகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, வண்ணக் கயிறுகள் மற்றும் ஒலி எழுப்பும் சலங்கைகள், ஜிமிக்கி உள்ளிட்ட அணிகலன்களால் அலங்கரிக்கப்படும். குடும்பத்தில் ஒன்றாக கருதப்படும் கால்நடைகளை அலங்கரித்து அழகு பார்க்க விவசாயிகள் தனி ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படி, வரும், 16ம் தேதி உழவர் தினத்திற்கு விவசாயிகள், தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.அவ்வகையில், பொள்ளாச்சி, காந்திமார்க்கெட் ஒட்டிய மாட்டு சந்தையில் கழுத்து கயிறு, மூக்கணாங்கயிறு, திருஷ்டிக்கான கருப்பு கயிறு பல வண்ணங்களில் விற்பனைக்கு தருவிக்கப்பட்டுள்ளன. தவிர, ஒலி எழுப்பும் மணிவகைகள், அணிகலன்கள் காண்போரை கவரும் வகையில் விற்பனைக்கு வந்துள்ளன. வியாபாரிகள் கூறியதாவது: ரேக்ளா மாடுகள், சாதாரண மாடுகளுக்கு என தனித்தனியே கயிறுகள், அணிகலன்கள் விற்கப்படுகின்றன.இதேபோல, கறவை மாடு, காளை மாடு என சாதாரண மாடுகளுக்கு கழுத்து கயிறு, மூக்கணாங்கயிறு, கருப்பு கயிறு உள்ளிட்டவை ஒரு செட்டாகவும் விற்கப்படுகிறது. குறிப்பாக, ஒவ்வொரு அணிகலன்களும் 50 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.