கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்
அன்னுார்; அன்னுார் வட்டாரத்தில் குப்பனுார் மற்றும் அக்கரை செங்கப்பள்ளி பகுதியில் இரவு நேரத்தில் அனுமதியின்றி கிராவல் மண் எடுக்கப்பட்டு கடத்தப்படுகிறது. இதை தடுக்க சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு துணை தாசில்தார் தெய்வபாண்டியம்மாள், வருவாய் ஆய்வாளர்கள் குருநாதன், செந்தில்குமார் ஆகியோர், அன்னுாரில் சத்தி ரோட்டில் வாகன சோதனை செய்தனர். அப்போது பசூரை சேர்ந்த டிப்பர் லாரி பிடிபட்டது. அதில் மூன்று யூனிட் கிராவல் மண் இருந்தது. மண் எடுத்துச் செல்ல எவ்வித அனுமதியும் பெறவில்லை. இதையடுத்து வருவாய் துறையினர் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து மண்ணுடன் அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அன்னுார் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) நாகராஜ் அளித்த புகாரின் பேரில், போலீசார் டிப்பர் லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். வாகன தணிக்கையின் போது இறங்கி தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.