கோவைக்கு வந்தாச்சு தாழ்தள சொகுசு பஸ்கள்! முதியோர், மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயணிக்க வசதி
கோவை,: ஒரே நேரத்தில் நுாறு பேர் வரை பயணிக்கவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் எளிதாக ஏறி இறங்கும் வகையிலான நவீன தொழில்நுட்ப வசதிகளுடனும் கூடிய தாழ்தள சொகுசு பஸ்கள், கோவைக்கு வந்துள்ளன.கோவையில் இயங்கும் டவுன் பஸ்களில் பெரும்பாலானவற்றின் படிகள் உயர்ந்திருப்பதால் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முதியோர் ஏறி இறங்குவதற்கு சிரமப்படுகின்றனர்.கலெக்டர் தலைமையில் நடந்த சாலைபாதுகாப்பு கூட்டத்தில், நுகர்வோர் அமைப்புகள், 'தாழ்தள சொகுசு பஸ்கள் அறிமுகப்படுத்த வேண்டும்' என்று, வேண்டுகோள் விடுத்தன.இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில், தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கோவைக்கு 100 தாழ்தள சொகுசு பஸ்களை வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. முதல் கட்டமாக, 24 தாழ்தள சொகுசு பஸ்கள் நேற்று வந்தன. அவற்றை கோவை நகரின் பல்வேறு வழித்தடங்களில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக்கழக கோவை மண்டலம் செய்துள்ளது.உக்கடம் மற்றும் காந்திபுரத்திலிருந்து சோமனுார்; காந்திபுரத்திலிருந்து வாளையார்; காந்திபுரத்திலிருந்து அன்னுார், காரமடை, வேலந்தாவளம், சரவணம்பட்டி, சின்னமேட்டுப்பாளையம், வெள்ளக்கிணறு வழித்தடங்களில், மொத்தம் 24 பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன. 100 பயணியர்
அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:வழக்கமாக பஸ் படிக்கட்டுகளின் உயரம், 450 முதல் 500 மி.மீ இருக்கும். ஆனால், தற்போது வந்துள்ள தாழ்தள சொகுசு பஸ் படிக்கட்டின் உயரம், 300 மி.மீ., மட்டுமே. அதையும் தரை வரை டில்ட் செய்து இறக்கி ஏற்றும் வசதி உள்ளது.ஜி.பி.ஆர்.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது. பயணிகள் ஏறி இறங்கும் கதவை டிரைவரே ஆபரேட் செய்து கொள்ளலாம். பஸ்சின் நான்கு பக்கங்களிலும் பயணிகள் சொகுசாக அமர்ந்து செல்வதற்காக சஸ்பென்ஷன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.பயணிகள் நிறுத்தத்தை டிஸ்ப்ளே மற்றும் ஒலிபெருக்கி வாயிலாக தெரிவிக்கும் வசதி உள்ளது. பஸ்சின் பின்பக்கத்தில் இன்ஜின் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்சில் 70 பேர் அமர்ந்தும், 30 பேர் நின்று கொண்டும் பயணிக்கலாம்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.