மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேக விழா
அன்னுார்; பூரண்டாம்பாளையம், மதுரை வீரன், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பச்சாபாளையம் அருகே பூரண்டாம் பாளையத்தில், மதுரை வீரன், மாகாளியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் பல லட்சம் ரூபாய் செலவில், புதிதாக கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் மற்றும் மூன்று நிலை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 27ம் தேதி முதல் கால வேள்வி பூஜை உடன் துவங்கியது. நேற்று அதிகாலையில், இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. வேள்வி சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய குடங்கள் கோவிலை வலம் வந்தன. நேற்று காலை 8:45 மணிக்கு மாகாளியம்மன், மதுரை வீரன் ஆகிய மூலவர்களுக்கும், சப்த கன்னிமார், கருப்பராயன், பட்டத்தரசி அம்மன், முனியப்ப சாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் ஆகியவற்றுக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, தச தரிசனம், மகா அபிஷேகம் நடந்தது. மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.