உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தோட்டத்து கிணற்றில் விழுந்து ஆண் யானை பலி

தோட்டத்து கிணற்றில் விழுந்து ஆண் யானை பலி

தொண்டாமுத்தூர்: கோவையில், தோட்டத்திற்குள் புகுந்த யானையை விரட்டும் போது, 30 அடி ஆழ கிணற்றில் விழுந்து ஆண் யானை உயிரிழந்தது. போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட, சாடிவயல் வனப்பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு, 3 காட்டு யானைகள் வெளியேறி, அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்தது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினர் வந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சப்பாணிமடை, சோலைப்படுகை பகுதியில் உள்ள நிர்மலா தேவி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்குள், அதிகாலை, 3:30 மணிக்கு, 3 காட்டு யானைகளும் புகுந்தன. யானைகளை, ஒருபுறம் வனத்துறையினரும், எதிர்ப்புறம் விவசாயிகளும் விரட்டியுள்ளனர். இதில், 2 காட்டு யானைகள் ஒருபுறமும், மற்றொரு காட்டு யானை ஒருபுறமும், ஓடியுள்ளது. அப்போது, தனியாக சென்ற காட்டு யானை, தோட்டத்தில் இருந்த 30 அடி கிணற்றில் விழுந்தது. இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள், ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன் நீரில் இறங்கி, யானையை தேடினர். யானை நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு, தண்ணீருக்கு அடியில் இருந்த யானையின் உடல், தண்ணீரின் மேல் பகுதியில் மிதக்கத்துவங்கியது. இதனையடுத்து, தீயணைப்பு வீரர்கள், சுமார், 2 மணி நேரம் போராடி, 'ரோப்' கட்டி, கிரேன் மற்றும் ஜே.சி.பி.,யின் உதவியுடன், யானையின் உடலை, காலை, 7:10 மணிக்கு, வெளியே எடுத்தனர். அங்கிருந்து, டிப்பர் லாரி மூலம் யானையின் உடலை, சிறுவாணி பம்ப் ஹவுஸ் வனப்பகுதிக்கு கொண்டு சென்று, வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில், கால்நடை டாக்டர் வெண்ணிலா தலைமையிலான மருத்துவக் குழுவினர், யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து, உடலை அடக்கம் செய்தனர். இதுகுறித்து போளுவாம்பட்டி வனச்சரகர் ஜெயச்சந்திரன் கூறுகையில்,''22 வயதுள்ள ஆண் யானை ஓடும்போது, தவறி கிணற்றில் விழுந்தது. விழும்போது, அதன் தந்தம் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. கிணற்றின் கீழ் பகுதியில் சேறு அதிகம் இருந்ததால், அதனால் ஏழ முடியாமல், தும்பிக்கையில் நீர் புகுந்து யானை உயிரிழந்தது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை