உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகை அடகு கடை ஊழியரிடம் ரூ. 2.83 லட்சம் மோசடி செய்தவர் கைது

நகை அடகு கடை ஊழியரிடம் ரூ. 2.83 லட்சம் மோசடி செய்தவர் கைது

கோவை; வேறு நிறுவனத்தில் அடகு வைத்த நகையை மாற்றி அடகு வைப்பதாக கூறி தனியார் அடகு நிறுவனத்தில்ரூ. 2.83 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை, ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பிரியங்கா, 35; அதே பகுதியில் உள்ள தனியார் அடகு கடையில் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரின் கடைக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது முஸ்தாக், 27 என்பவர் வந்தார். பிரியங்காவிடம் தனது நகையை ரூ. 2.83 லட்சத்துக்கு சவுரிபாளையத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வைத்திருப்பதாகவும், அதனை எடுத்து உங்கள் நிதி நிறுவனத்தில் வைக்க வேண்டும், அதற்கான வட்டியை சரியாக செலுத்தி விடுவதாக கூறியுள்ளார். இதையடுத்து, அடகு வைத்த நகையை மீட்பதற்காக ரூ. 2.83 லட்சம் பணத்தை முஸ்தாக்கின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார். இதன் பின்னர், நிறுவனத்தில் இருந்து நகையை மீட்பதற்காக பிரியங்கா மற்றும் முஸ்தாக் ஆகியோர் புறப்பட்டு சென்றனர். செல்லும் வழியில் முஸ்தாக் தனது நண்பரான ஷேக் தாவூத் என்பவருடன் பைக்கில் தப்பி சென்றார். இதுகுறித்து பிரியங்கா ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி செய்த முகமது முஸ்தாக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !