நீதிபதிகள் குடியிருப்பில் சந்தன மரம் திருடியவர் கைது
கோவை : நீதிபதிகள் குடியிருப்பில் இருந்து சந்தன மரங்களை வெட்டி, திருடியவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். கோவை, ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட காமராஜர் சாலையில் நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமான சந்தன மரங்கள் உள்ளன. இங்கு, நீதிபதி நம்பிராஜ் தங்கியிருந்த வீட்டில் இருந்து, பொருட்களை எடுக்க அவரது மாமனார் வந்தார். அப்போது, அங்கிருந்த ஐந்து சந்தன மரங்கள் வெட்டப்பட்டிருந்ததை பார்த்தார். தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், அங்கு சென்று பார்த்தபோது, வெட்டப்பட்டிருந்த ஐந்து மரங்களில், நான்கு மரங்கள் திருடிச்செல்லப்பட்டிருந்தன. பெரியதாக இருந்ததால் ஒரு மரத்தை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். அதில் சந்தன மரத்தை திருடிச்சென்றது தேனி, உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த வினோத், 37 மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. போலீசார் வினோத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.