அரசு வேலை ஆசை காட்டி ரூ.11 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை
கோவை; அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 11 லட்சம் ரூபாய் மோசடி செய்தவருக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கோவை, ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவரது மகனுக்கு வேலை தேடி வந்தார். இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த குமரசிவன், 50, என்பவர் வேலாயுதத்தை சந்தித்தார். மத்திய அரசின் கலால் வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, வேலாயுதத்திடம், 15 லட்சம் ரூபாய் பெற்றார். ஆனால், வேலை பெற்று தராமல் ஏமாற்றி வந்தார். இதனால் பணத்தை திரும்பி கேட்டதால், நான்கு லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்தார். கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் வேலாயுதம் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் விசாரித்து, 2017, அக்., 16 ல் குமரசிவனை மோசடி வழக்கில் கைது செய்தனர். அவர் மீது, கோவை ஜே.எம்:7, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. விசாரித்த மாஜிஸ்திரேட் இந்திரஜித், குற்றம் சாட்டப்பட்ட குமரசிவனுக்கு, மூன்றாண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் பகவத்சிங் ஆஜராகி வாதிட்டார்.