மாவட்டத்தின் பல பள்ளிகளில் தலைமை இல்லை! கல்வி, நிர்வாக பணிகள் பாதிப்பு
கோவை: கோவை மாவட்டத்தில், பெரும்பாலான அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள், நீண்ட காலமாக காலியாக உள்ளதன் காரணமாக, கல்வி மற்றும் நிர்வாக பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என மொத்தம் 1,387 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 19 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.அதேபோல், கோவை கல்வி மாவட்டத்திலுள்ள உயர்நிலைப்பள்ளிகளில், 25க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 11க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேல்நிலைப்பள்ளிகளில் பெரும்பாலான இடங்களில், தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவது தொடர்பான, 'டெட்' தேர்வு வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்காமல், தலைமையாசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.அதேபோல், 2018க்கு பிறகு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இந்த வழக்கும், தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளை காரணம் காட்டி, பதவி உயர்வு வழங்காமல் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. இதற்கு, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நடைபெற்று வரும் கலந்தாய்வில், ஒன்றியத்திற்குள் ஒன்றியம்; மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலில், ஏற்கனவே உள்ள இடங்களுக்குள் மட்டுமே, ஆசிரியர்கள் மாறுதல் பெறுகின்றனர். அதனால், காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்கள், தொடர்ந்து காலியாகவே இருக்கின்றன. இதனால் தலைமை ஆசிரியருக்கு அடுத்த நிலையில், உள்ள ஆசிரியர்கள் பணிகளை கவனிக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வகுப்பறைகளில், பாடம் கற்பிக்க ஆளில்லை. கல்வி பணிகளும் எவ்வித முன்னேற்றமுமின்றி, தேக்க நிலையில் தொடர்கின்றன.இரு ஆண்டுகளுக்கு முன், ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டது. இதனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய தலைமை ஆசிரியர்கள், வரும் கல்வியாண்டில் ஓய்வு பெற்று விடுவர். அப்போது காலியிடங்களின் எண்ணிக்கை, இன்னும் அதிகரிக்கும். ஆகவே பதவி உயர்வின் வாயிலாக, காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.