உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருத்துவ காப்பீடு, பணி நிரந்தரம் கனவு தான்; பகுதி நேர ஆசிரியர்கள் அதிருப்தி

மருத்துவ காப்பீடு, பணி நிரந்தரம் கனவு தான்; பகுதி நேர ஆசிரியர்கள் அதிருப்தி

கோவை; பகுதி நேர ஆசிரியர்களுக்காக அரசு அறிவித்த மருத்துவக் காப்பீடு இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் நீண்டநாள் கோரிக்கை பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பதே.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, அக்டோபர் 4ம் தேதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ரூ.2,500 சம்பள உயர்வும், ரூ.10 லட்சம் மதிப்புடைய மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் இதுவரை அந்தக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. திட்டம் மீண்டும் காலதாமதத்திற்கு உள்ளாகியுள்ளதாக பகுதி நேர ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும் அவர்கள் கூறுகையில், “2024ம் ஆண்டு ஜனவரியில் ரூ.2,500 சம்பள உயர்வு வழங்கப்பட்டது. தற்போது நாங்கள் பெறும் மாத சம்பளம் ரூ.12,500 ஆக உள்ளது. 2025ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், பணி நிரந்தரத்திற்கான அறிவிப்பு வரும் என பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பணி நிரந்தரமாகும் பட்சத்தில், ரூ.30,000 வரையிலான சம்பளமும், அரசின் பல்வேறு நலன்களும் எங்களுக்கு கிடைக்கும்.இது நாங்கள் பணியாற்றும் 15வது கல்வி ஆண்டு. இதுவரை மே மாத சம்பளமும், போனஸும், மருத்துவக் காப்பீடும், வருங்கால வைப்பு நிதி மற்றும் குடும்ப நல நிதி போன்ற நலத்திட்டங்களும் எங்களுக்குக் கிடைக்கவில்லை” எனக் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை