ஆண்களுக்கான பேட்மின்டன் போட்டி: லீக் சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதி
கோவை : பாரதியார் பல்கலை ஆண்களுக்கான பேட்மின்டன், 'லீக்' முறையில் நடக்கும் அரையிறுதி போட்டிக்கு, நான்கு அணிகள் தகுதி பெற்றன.பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே ஆண்களுக்கான பேட்மின்டன் போட்டிகள், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று முன்தினம் துவங்கி வரும், 17ம் தேதி வரை நடக்கிறது. 'நாக் அவுட்' மற்றும் 'லீக்' முறைகளில் நடக்கும் இப்போட்டியில், 28 அணிகள் பங்கேற்றன.நேற்று காலை நடந்த காலிறுதி போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணி, 3-0 என்ற செட் கணக்கில் ஜி.ஆர்.டி., கல்லுாரி அணியையும், கே.பி.ஆர்., கல்லுாரி அணி, 3-0 என்ற செட் கணக்கில், எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கல்லுாரி அணியையும் வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றன.தொடர்ந்து, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி அணி, 3-0 என்ற செட் கணக்கில் என்.ஜி.பி., கல்லுாரி அணியையும், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி, 3-0 என்ற செட் கணக்கில் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணியையும் வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தன.இதையடுத்து, 'லீக்' முறையில் அரையிறுதி போட்டிகள் நடந்துவருகின்றன. முதல் போட்டியில் பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி, 3-0 என்ற செட் கணக்கில் கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி அணியையும், இரண்டாம் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி அணி, 3-0 என்ற செட் கணக்கில், இந்துஸ்தான் கல்லுாரி அணியையும் வென்றன. தொடர்ந்து போட்டிகள் நடந்துவருகின்றன.