உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சத்தி ரோட்டில் 1.2 கி.மீ., நிலம் கையகப்படுத்த ரூ.154 கோடி ஒதுக்கியது மெட்ரோ நிறுவனம் வேலையை துவக்கப் போகிறது மாநகராட்சி

சத்தி ரோட்டில் 1.2 கி.மீ., நிலம் கையகப்படுத்த ரூ.154 கோடி ஒதுக்கியது மெட்ரோ நிறுவனம் வேலையை துவக்கப் போகிறது மாநகராட்சி

கோவை; கோவை - சத்தி ரோட்டில், டெக்ஸ்டூல் பாலம் முதல் சூர்யா மருத்துவமனை வரை, 'மெட்ரோ ரயில்' திட்டத்துக்கு ஏற்ப, 24 மீட்டர் அகலத்துக்கு, 1.2 கி.மீ., துாரம் நிலம் கையகப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் கேட்ட, 154 கோடி ரூபாயை, 'மெட்ரோ ரயில்' நிறுவனம் ஒதுக்கியுள்ளது.கோவையில், அவிநாசி ரோட்டில் 20.4 கி.மீ., சத்தி ரோட்டில் 14.4 கி.மீ., என, 34.8 கி.மீ., துாரத்துக்கு 'மெட்ரோ ரயில்' வழித்தடம் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்விரு ரோடுகளிலும், தேவையான நிலம் கையகப்படுத்த வேண்டும்.ரோட்டுக்கு கீழே குடிநீர், பாதாள சாக்கடை குழாய்கள், மின் புதை வடம், தொலைத்தொடர்பு ஒயர்கள் செல்கின்றன. இவற்றை 'ஷிப்ட்' செய்ய வேண்டும். நிலம் அளவீடு செய்தல் மற்றும் மேற்கண்ட சேவைகளை, 'ஷிப்ட்' செய்வது உள்ளிட்ட பணிகளை செய்யும் பொறுப்பு, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.முதல்கட்டமாக, சத்தி ரோட்டில் டெக்ஸ்டூல் பாலம் முதல் சூர்யா மருத்துவமனை திருப்பம் வரை, 1.2 கி.மீ., துாரத்துக்கு நிலம் கையகப்படுத்தப்படுகிறது. முதலில், 20 மீட்டர் அகலத்துக்கு கையகப்படுத்த அளவீடு செய்யப்பட்டது.'மெட்ரோ ரயில்' திட்டத்துக்கேற்ப, 24 மீட்டர் அகலத்துக்கு கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என மதிப்பீடு தயாரித்து, 'மெட்ரோ ரயில்' நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இயக்குனரவை கூட்டம்

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனரவை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. மேலாண்மை இயக்குனர் சித்திக், திட்ட இயக்குனர் அர்ஜூனன், தலைமை பொது மேலாளர் லிவிங்ஸ்டன் எலியாசர், கோவையில் இருந்து 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மற்றும் நகரமைப்பு பிரிவு அலுவலர் குமார், உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில், சத்தி ரோட்டில், 1.2 கி.மீ., துாரத்துக்கு, 24 மீட்டர் அகலத்துக்கு நிலம் கையகப்படுத்த ரூ.154 கோடி கோரப்பட்டது.சத்தி ரோடு மற்றும் அவிநாசி ரோட்டில் நிலம் கையகப்படுத்த அளவீடு செய்யவும், என்னென்ன சேவைகள் செய்யப்படுகின்றன என ஆய்வு செய்து தரவும், முதல்கட்டமாக ரூ.2 கோடி மற்றும் 'மெட்ரோ' நிறுவனத்துக்கு அலுவலகம் ஒதுக்கிக் கொடுப்பது தொடர்பாக, மாநகராட்சியில் இருந்து தெரிவிக்கப்பட்டது.நிலம் கையகப்படுத்த ரூ.154 கோடி, சர்வே பணிக்கு முதல்கட்ட நிதி ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டது. 'மெட்ரோ ரயில்' நிறுவனத்துக்கு, கோவையில் அலுவலகம் அமைக்கவும் இயக்குனரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதையடுத்து, சத்தி ரோட்டில், 24 மீட்டர் அகலத்துக்கு நிலம் கையகப்படுத்த 'சர்வே' பணியை மாநகராட்சி மீண்டும் துவக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை