நுண் உரம் தயாரிக்கும் கூடம்; ரூ.21 லட்சத்தில் கட்டப்பட்டு முடக்கம்
அன்னுார்; அன்னுார் அருகே 21 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட நுண் உரம் தயாரிக்கும் கூடம் பயன்பாடு இல்லாமல் உள்ளது.அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் துாய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டு, பேட்டரி வாகனம் மற்றும் சாதாரண வாகனங்களில், 150 வீடுகளுக்கு ஒரு துாய்மை காவலர் சென்று குப்பைகளை சேகரித்து வருகிறார்.திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கின்றனர். இதில் மக்காத குப்பைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, சாலை அமைத்தல், சிமென்ட் தொழிற்சாலைக்கு தருதல், மக்கும் குப்பைகளை பயன்படுத்தி நுண்ணுரம் தயாரித்தல் ஆகியவைக்காக அன்னுார் வட்டாரத்தில் சில இடங்களில் நுண் உரம் தயாரிப்பு கூடம் அமைக்கப்பட்டது.துாய்மை பாரத இயக்கத்தில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 21 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயில் கடந்த 2020ம் ஆண்டு காட்டம்பட்டி ஊராட்சி கணேசபுரத்தில் அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட பிறகு ஓரிரு ஆண்டுகள் மட்டுமே செயல்பட்டது. அதன் பிறகு தற்போது செயல்பாடு இல்லாமல் உள்ளது.இதுகுறித்த இப்பகுதி மக்கள் கூறுகையில், '21 லட்சம் ரூபாய் செலவு செய்தும் நுண் உரம் தயாரிக்கப்படாமல் வெறும் காட்சி பொருளாக உள்ளது. அதிகாரிகள் உற்பத்திக் கூடத்தில் உள்ள பிரச்னைகளை கண்டறிந்து இங்கு நுண்ணுரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிதி வீணாக முடங்கிக் கிடக்கிறது,' என்றனர்.