இடம் பெயரும் யானைகள்; தொழிலாளர்கள் நிம்மதி
வால்பாறை; கேரளா வனப்பகுதிக்குள் இடம் பெயரும் யானைகளால், எஸ்டேட் தொழிலாளர்கள் தற்காலிகமாக நிம்மதியடைந்துள்ளனர்.வால்பாறையில், பருவமழைக்கு பின் வனவளம் பசுமையாக இருப்பதால், கேரளாவிலிருந்து நுாற்றுக்கணக்கான யானைகள், மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை, பன்னிமேடு வழியாக வந்து, எஸ்டேட்களில் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.இவை பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்திலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் நுழைந்து, வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.இந்நிலையில், வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட்களில் முகாமிட்ட யானைகள், தற்போது மழைப்பொழிவு குறைந்த நிலையில், கேரளா வனப்பகுதிக்குள் கூட்டம் கூட்டமாக செல்ல துவங்கியுள்ளன. இதனால் எஸ்டேட் தொழிலாளர்கள் தற்காலிமாக நிம்மதியடைந்துள்ளனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆனைமலை புலிகள் காப்பகத்தில், யானைகளால் தான் காடுகள் பாதுகாப்பாக உள்ளன. கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக, எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட யானைகள், மழைப்பொழிவு இல்லாததால், மளுக்கப்பாறை வழியாக கேரள வனப்பகுதிக்குள் இடம் பெயரத்துவங்கியுள்ளன. வால்பாறையில் தென்மேற்குப்பருவ மழை துவங்கியபின்,ஜூலை மாதத்தில் யானைகள் மீண்டும் வால்பாறைக்கு வரத்துவங்கும்' என்றனர்.