ராணுவ தளவாட உற்பத்தி மாநாடு நாளை நடக்கிறது
கோவை: கொடிசியாவில், ராணுவ புத்தாக்கம் மற்றும் அடல் இன்குபேஷன் மையம் (சி.டி.ஐ.ஐ.சி.,) சார்பில், ராணுவ தளவாட உற்பத்தி மாநாடு, நாளை துவங்குகிறது. கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், “இந்தியாவில் ராணுவ தளவாட உபகரணங்கள், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. மேக் இன் இண்டியா வாயிலாக, ராணுவ தளவாட உபகரண உற்பத்தியில், உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் வரும் 13, 14ம் தேதிகளில் இம்மாநாடு நடக்கிறது,” என்றார். சி.டி.ஐ.ஐ.சி., இயக்குநர் பொன்ராம் கூறுகையில், ''இம்மாநாட்டில் பாதுகாப்புத் துறை சார்ந்த அனைத்து நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான உபகரணங்களைக் காட்சிப்படுத்துகின்றன. எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களும் தங்களின் திறனை வெளிக்காட்டும் வகையில் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்துகின்றன. வர்த்தக வாய்ப்புகள், அரசு நிதி உதவிகள் மாநாட்டில் விளக்கப்படும். கருத்தரங்குகளும் நடைபெறும்,'' என்றார். சி.டி.ஐ.ஐ.சி., தலைமைச் செயல் அதிகாரி வினோத் குமார் கூறுகையில், “சி.டி.ஐ.ஐ.சி., வாயிலாக உறுப்பினர்களுக்கு, பாதுகாப்பு தளவாட உபகரண உற்பத்தி ஆர்டர் பெற்றுத்தரப்படுகிறது. ஏராளமான ஸ்டார்ட்அப்களை உருவாக்கியுள்ளோம். தற்போது 40 உறுப்பினர்கள், பாதுகாப்பு துறைக்கு உபகரணங்களை உற்பத்தி செய்து தருகின்றனர். 78 உபகரணங்களுக்கு தேவை உள்ளது. எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் முன்வந்து உற்பத்தி செய்யலாம்,” என்றார். கொடிசியா செயலாளர் யுவராஜ், சி.டி.ஐ.ஐ.சி., இயக்குநர் சுந்தரம் உள்ளிட்டோர்உடனிருந்தனர்.