உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ராணுவ தளவாட உற்பத்தி; தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு

 ராணுவ தளவாட உற்பத்தி; தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு

கோவை: கொடிசியாவில், ராணுவ புத்தாக்கம் மற்றும் அடல் இன்குபேஷன் மையம் (சி.டி.ஐ.ஐ.சி.,) சார்பில், ராணுவ தளவாட உற்பத்தி மாநாடு நேற்று துவங்கியது. ராணுவத் தளவாட தர உத்தரவாத இயக்குநரகத்தின் (டி.ஜி.க்யூ.ஏ.,) தலைமை இயக்குநர் மனோகரன், துவக்கி வைத்து பேசியதாவது: தற்சார்பு இந்தியா இலக்கின்படி, பாதுகாப்புத் துறையில் ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா தற்சார்பு பெறவும், உலகின் மிகச்சிறந்த ராணுவத் தளவாட ஏற்றுமதியாளர் என்ற நிலையைப் பெறுவதற்கும் உதவி செய்வதே எங்கள் நோக்கம். இந்திய பாதுகாப்புத் துறைக்கு, தனியார் துறையினர் அதிக முதலீடு செய்து, வருவாய் ஈட்ட முடியும். தற்போது இறக்குமதி செய்து வரும் உபகரணங்களை இந்தியாவிலேயே தயாரிக்க முடியும். துல்லிய வழிகாட்டல் தொழில்நுட்பங்கள், உணரிகள், தொலை நோக்கிகள், கைரோஸ், வெடிப்பொருட் கள், வெடிமருந்து செயலாக்க இயந்திரங்கள், ஏ.ஐ., டிரோன்கள் உள்ளிட்ட துறைகளில் அபரிமிதமான தேவை உள்ளது. உள்நாட்டு நிறுவனங்கள் வந்தால் உதவத் தயார். இவ்வாறு, அவர் பேசினார். மாநாட்டில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனம், ட்ரூப் கம்போர்ட்ஸ் லிட், பி.இ.எம்.எல்., உள்ளிட்ட நிறுவனங்கள் பாதுகாப்புத் துறை சார்ந்த தங்களுக்குத் தேவையான தளவாடங்களைக் காட்சிப்படுத்தியுள்ளன. இவற்றை எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பார்வையிட்டு, தங்களுக்கான உற்பத்தி ஆர்டரைப் பெறலாம். ராணுவ தளவாட உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கான ஆர்டர்களைப் பெறுவது, எம்.எஸ்.எம்.இ., மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள், ஜெம் போர்டல் நடைமுறைகள், டி.ஜி.க்யூ.ஏ., அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்களாக பதிவு செய்வதற்கான நடைமுறைகள், 'செமிலக்' சான்று நடைமுறைகள், ஸ்ரீஜன் போர்டல், அரசு வழங்கும் நிதி உதவிகள் உள்ளிட்ட அனைத்து வழிகாட்டுதல்களும் மாநாட்டில் இடம்பெற்றுள்ளன. எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பார்வையிட்டு பயனடையலாம். துவக்க விழாவில், சி.டி.ஐ.ஐ.சி., இயக்குநர் பொன்ராம், பி.இ.எம்.எல்., பாலக்காடு, செயல் இயக்குநர் சேகர், டி.சி.எல்., தலைமைப் பொதுமேலாளர் பி.எஸ்., ரெட்டி, தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில் வழித்தட நிறுவன துணைத் தலைவர் விநாயகம், வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ