கோவை:''மக்கள் நலனில் அக்கறை கொண்ட, சமுதாய பிரச்னைகளை, தேவைகளை அறிந்து சொல்லும் இதழாக 'தினமலர்' இருக்கிறது,'' என, அமைச்சர் செந்தில் பாலாஜி புகழாரம் சூட்டினார்.கோவையில், மாநகராட்சி பள்ளிகளுக்கான 'பட்டம்' வினாடி - வினா போட்டியில் வென்றவர்களுக்கு விருது வழங்கி, தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:'தினமலர்' நாளிதழ் 1951ல் துவங்கப்பட்டது; 74 ஆண்டுகளாகின்றன. கோவை பதிப்பு 1992ல் துவங்கப்பட்டு, 30 ஆண்டுகளை கடந்து விட்டது. சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிட்டு வருகிறது. 'தினமலர்' நாளிதழ் மாணவர்கள் நலனில் தனி கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, ஜெயித்துக் காட்டுவோம், இன்ஜி., மாணவர்களுக்கான வழிகாட்டி, 'பட்டம்' மாணவர் பதிப்பு என, மாணவர்கள் நலனில் அக்கறை காட்டி வருகிறது. வார இறுதி நாட்களில் ஆன்மிக மலர், சிறுவர் மலர், வாரமலர் என இதழ்களை வெளியிட்டும், கோவையில் அதிக வாசகர்களை கொண்ட நாளிதழாகவும் விளங்குகிறது.கோவை மக்கள் நலனில் அக்கறை கொண்ட நாளிதழாக, சமுதாய பிரச்னைகளை, தேவைகளை அறிந்து சொல்லும் இதழாக இருக்கிறது 'தினமலர்!' அதேசமயம், அரசின் திட்டங்களையும் வெளியிட வேண்டும் என்பதையும் வேண்டுகோளாக வைக்கிறேன்.சாலைகள் மோசம் என செய்தி வெளியிடும் அதே சமயம், கடந்த 3.5 ஆண்டுகளில், 415 கோடி ரூபாய் மதிப்பில் கோவை மாநகராட்சிக்குள் மட்டும் 860 கி.மீ., நீளத்துக்கு தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை முதல்வர் கோவை வந்தபோது, மீண்டும் கோரிக்கை வைத்ததும் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, சாலைகளை மேம்படுத்த பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இவற்றையும் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன்.கோவையில் ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத நிலையிலும், முதல்வர் கோவைக்கு அதிக முறை வந்து, திட்டங்களை தந்துள்ளார். அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க, 'தினமலர்' இதழின் பங்கும் தேவை.அரசு பள்ளி மாணவர்களுக்கும், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கும் 'தினமலர்' இது போன்ற நிகழ்ச்சியை நடத்துவது வரவேற்கத்தக்கது. நானும் அரசு பள்ளி மாணவன் தான். பள்ளி கல்விக்கு மட்டும் கடந்த பட்ஜெட்டில் 44,000 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவிலேயே பள்ளி கல்வித் துறைக்கு இவ்வளவு நிதி ஒதுக்கிய ஒரே மாநிலம் தமிழகம் தான்.கல்வி என்பது அடிப்படை தேவை. எனவே தான், அதை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் என பல்வேறு திட்டங்களை அறிவித்து முதல்வர் செயல்படுத்தி வருகிறார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பங்கேற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.இவ்வாறு அவர் பேசினார்.
முதலிடத்தை பிடித்த ரத்தினபுரி மேல்நிலைப்பள்ளி
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், கோவையில் நேற்று நடந்த வினாடி -- வினா வெற்றி இறுதிப் போட்டியில், மாநகராட்சி ரத்தினபுரி மேல்நிலைப் பள்ளி முதல் பரிசு வென்றது.பள்ளி மாணவர்களிடம் கணிதம், அறிவியல், வரலாறு, மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில் 'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. பட்டம் வாசிக்கும் மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தும் வகையில், ஆண்டுதோறும் வினாடி - வினா போட்டி நடத்தப்படுகிறது.கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு நடப்பாண்டுக்கான 'வினாடி - வினா விருது' போட்டி, 'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் நடந்தது. டைட்டில் ஸ்பான்சராக இந்துஸ்தான் கல்விக் குழுமம் கரம் கோர்த்தது. அதிக மதிப்பெண் பெற்ற முதல் எட்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. குவிஸ் மாஸ்டர் அரவிந்த், ஐந்து சுற்றுகளாக வினாடி - வினா போட்டியை நடத்தினார். துவக்கம் முதலே கடும் போட்டியை வெளிப்படுத்தி வந்த ரத்தினபுரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சத்தியமூர்த்தி, தீபேந்திரா, கடைசி கட்டத்தில் அபாரமாக விளையாடி, மதிப்பெண்களை அள்ளி, முதல் பரிசை தட்டிச் சென்றனர்.வடகோவை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முகமது ஆஷிப், பிரதீப் ஆகியோர் இரண்டாமிடமும், ராமசாமி நகர் உயர்நிலைப் பள்ளி மாணவியர் ஜெனிலியா, பவித்ராஸ்ரீ ஆகியோர் மூன்றாமிடமும் பிடித்து அசத்தினர்.முதல் பரிசாக லேப்டாப், வெற்றிக் கோப்பை; இரண்டாம் பரிசாக ஸ்மார்ட்போன் மற்றும் கோப்பை; மூன்றாம் பரிசாக ஸ்மார்ட் டேப் மற்றும் கோப்பைகளை, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். 'தினமலர்' நாளிதழ் இணை இயக்குனர் லட்சுமிபதி ஆதிமூலம் உடனிருந்தார்.'தினமலர்' கோவை பதிப்பு செய்தி ஆசிரியர் விஜயகுமார், 'பட்டம்' பொறுப்பாசிரியர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமையாசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தனர்.