நீலாம்பூர் வரை மேம்பாலத்தை நீட்டிக்க பரிந்துரை அமைச்சர் வேலு தகவல்
கோவை: ''கோவை - அவிநாசி ரோடு மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிப்பதற்கான திட்ட அறிக்கை நிதித்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது,'' என, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு தெரிவித்தார்.தமிழக பொதுப்பணித்துறை சார்பில், கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் நுாலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியை, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, நேற்று ஆய்வு செய்தார்.அதன்பின், அமைச்சர் வேலு நிருபர்களிடம் கூறியதாவது:கோவையில் கட்டப்படும் நுாலகம், 2026 ஜனவரியில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மொத்தம் ஒரு லட்சம் புத்தகங்கள் இருக்கும். நான்கு லிப்ட் வசதி செய்யப்படும். முதல் தளத்துக்கு 'எக்ஸலேட்டர்' அமைக்கப்படும். ஆய்வகத்தில் கட்டுமான பொருட்களின் தரத்தை சோதனையிடுகிறோம். மண் பரிசோதனை, குடிநீர் பரிசோதனை என இதுவரை, 135 வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. கம்பி தரமானதாக இருக்கிறதா என ஆய்வு செய்தோம்.சாயிபாபா காலனி மேம்பாலத்தை நீட்டிக்க வாய்ப்பிருக்கிறதா என, 'டிசைன்' ஆய்வு செய்யப்படும்; விபத்து ஏற்படாது என தெரிந்தால், திட்ட மதிப்பீடு தயாரித்து, நிதித்துறைக்கு அனுப்பி, அப்பணியை செய்ய முடியும்.அவிநாசி ரோடு மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிக்க, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இசைவு பெறப்பட்டதும் 'டெண்டர்' கோரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்நிதியாண்டிலேயே அப்பணியை தொடர்வதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது.தற்போது நடைபெறும் மேம்பாலப் பணியில், ஹோப் காலேஜ் பகுதியில் ரயில்வே பணி மேற்கொள்ள வேண்டும். ரயில்வே துறையின் மூன்று கட்ட ஆய்வு முடிந்து விட்டது; நான்காம் கட்ட ஆய்வு முடித்து ஒப்புதல் கொடுத்ததும் 'டெக்' அமைக்கப்படும். நவ இந்தியா பகுதியில் மூன்று 'டெக்' போட வேண்டியிருக்கிறது. ஏப்., மாதத்துக்குள் பணியை முடிக்க, ஒப்பந்த நிறுவனத்துக்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம்.இவ்வாறு, அமைச்சர் வேலு கூறினார்.அப்போது, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ஷர்மா, கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.