துணை கலெக்டர்களை தாய் துறைக்கே அனுப்ப அமைச்சு பணியாளர் கோரிக்கை
கோவை: அனைத்து மாநகராட்சி அமைச்சுப் பணியாளர்களின், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம், காணொலி காட்சி வாயிலாக நடந்தது. தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சுப் பணியாளர் சங்கத்தின், நிறுவனர் சுப்ரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், மாநகராட்சிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர் உட்பட அனைத்து மாநகராட்சி அமைச்சுப் பணியாளர்களுக்கும், 2023ம் ஆண்டு புதிய விதிகளில் கூறப்பட்டுள்ள, எந்த கூடுதல் தகுதியையும் வலியுறுத்தாமல், ஏற்கனவே நடைமுறையில் இருந்த, 1996ம் ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சிப் பணி விதிகளின்படி, பணிமூப்பின்படி பதவி உயர்வு வழங்க வேண்டும். அவ்வாறு பதவி உயர்வு வழங்கிய பின்னரும், காலியாக உள்ள பணியிடங்களில், இதர மாநகராட்சிகளில் உள்ள பணியாளர்களிடம் விருப்பம் பெற்று, அவ்வாறு இருப்பின் இதர மாநகராட்சி பணியாளர்களை, பதவி உயர்வு செய்ய வேண்டும். விதிகளுக்கு புறம்பாக கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் மாநகராட்சிகளில் உதவி கமிஷனர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ள, வருவாய் துறையை சேர்ந்த துணை கலெக்டர்களை அவர்களது தாய் துறையான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு, திருப்பி அனுப்பவேண்டும். அந்த காலிப்பணியிடங்களில், மாநகராட்சிப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அரசின் கவனத்துக்கு இக்கோரிக்கைகளை, கொண்டு செல்வது தொடர்பாக வரும், 25ம் தேதி திருச்சியில் அனைத்து மாநகராட்சி அமைச்சுப் பணியாளர்களின் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.