கால்நடை மருந்தகங்களை தரம் உயர்த்தணும்! எம்.எல்.ஏ., ஜெயராமன் வலியுறுத்தல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், என, எம்.எல்.ஏ., ஜெயராமன், கால்நடை மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், கால்நடை மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலர் சத்தியபிரதா சாஹூக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, ராமநாதபுரம் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் கால்நடை மருந்தகம் செயல்படுகிறது.கால்நடை மருந்தகத்தை சுற்றி, ஐந்து கால்நடை மருந்தகங்களும், ஒரு கிளை நிலையமும் உள்ளது.இந்த மருந்தகத்தை சுற்றி, ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மாடுகள், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளாடு, செம்மறியாடுகள் உள்ளன. மேலும், இரண்டு லட்சம் கோழிகள் உள்ள கோழிப்பண்ணைகளும் உள்ளன. எனவே, ராமநாதபுரம் கால்நடை மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.கடந்த, 2017 - 18ம் நிதியாண்டிலேயே ஐந்து கால்நடைகள் மருந்தகங்கள், மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும், அதே ஆண்டு கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த பரிசீலனை செய்யப்படும், என, கால்நடை பராமரிப்பு மருத்துவ பணிகள் இயக்குனர் தெரிவித்தார். எனவே, உடனடியாக தரம் உயர்த்த வேண்டும்.நெகமம் பேரூராட்சியில், கடந்த, 1950ம் ஆண்டு கால்நடை மருந்தகம் துவங்கப்பட்டது. இந்த மருந்தகத்தில், 20 கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், சிக்கலான சிகிச்சைக்கு, 15 கி.மீ., தொலைவில் உள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை செல்லும் நிலை உள்ளது.எனவே, கால்நடை வளர்ப்போரின் நலன் கருதி, பெரிய நெகமம் கால்நடை மருந்தகத்தை, கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.