உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிணத்துக்கடவு சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு அமைச்சருக்கு எம்.எல்.ஏ., கடிதம் 

கிணத்துக்கடவு சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு அமைச்சருக்கு எம்.எல்.ஏ., கடிதம் 

பொள்ளாச்சி:'கிணத்துக்கடவு அருகே, 'சிப்காட்' தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், தொழில் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலுகா மெட்டுவாவி சுற்றுப்பகுதியில், 1,500 ஏக்கரில், 'சிப்காட்' தொழிற்பூங்கா அமைக்க, விவசாய நிலங்களை கையப்படுத்துவதற்காக, 'ட்ரோன்' வாயிலாக இரவு நேரத்தில் அளவீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர்கள், மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்துள்ளனர். ஆனால், அரசு தரப்பில் இருந்து, 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கப்படுகிறது அல்லது அதுபோன்ற திட்டம் இல்லை என, எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.இந்நிலையில், எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், தொழில் துறை அமைச்சர் ராஜாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி மற்றும் சூலுார் தொகுதிகளுக்கு உட்பட்ட பல கிராமங்களில், 1,500 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, 'சிப்காட்' தொழிற்பூங்கா அமைக்க அளவீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, கிராம ஊராட்சிகளுக்கோ, எம்.எல்.ஏ.,க்களுக்கோ தெரிவிக்கவில்லை.திட்டத்தின் பயன்பாடு குறித்து விளக்கமளிக்காமல், தனிச்சையாக நிலங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுள்ளது. தமிழக அரசு, விவசாயிகளின் நலனை கருத்தில் கொள்ளாமல், நிலத்தை கையகப்படுத்தி, 'சிப்காட்' நிறுவனத்துக்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை