உள்ளூர் வழித்தடத்தில் மொபசல் பஸ்கள் வேகமாக இறங்க முடியாமல் சிரமம்
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ்கள், 'ஐடியல்' செய்து உடைப்புக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், மொபசல் பஸ்கள், உள்ளூர் வழித்தடங்களில் இயக்கப்படுவதால் சிரமம் ஏற்படுகிறது. பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு, கல்லுாரி மற்றும் அலுவலகங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று திரும்புகின்றனர். பயணியர் நலன் கருதி, பொள்ளாச்சி - - கோவை இடையே இரண்டு நிமிட இடைவெளியில், 35 அரசு மற்றும் 15 தனியார் என, 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, கிராம மக்கள் நகரத்துக்கு வந்து செல்லும் வகையில், அதிகப்படியான அரசு டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன. ஆனால், அவற்றில் பல பஸ்கள், காலாவதியான நிலையில், 'ஐடியல்' செய்யப்பட்டு, உடைப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அதற்கு மாற்றாக மொபசல் பஸ்கள், உள்ளூர் வழித்தடத்தில் இயக்கப்படுவதால் பயணியருக்கு சிரமம் ஏற்படுகிறது. மக்கள் கூறியதாவது: மாநகரங்களை பொறுத்தமட்டில், மிகவும் பழமையான நகர பஸ்கள் நீக்கப்பட்டு, புதிதாக நீல நிற தாழ்தள சொகுசு பஸ்கள், பெண்கள் இலவச பயணத்துக்கு சேர்க்கப்பட்டுள்ளன. அதில், 'டீலக்ஸ்' தடத்தில் இயக்கப்பட்ட பஸ்கள், சாதாரண வழித்தடத்தில் பயன்படுத்தும் வகையில், 'பிங்க்' நிறத்திற்கு மாற்றியும் இயக்கப்படுகின்றன. ஆனால், உள்ளூர் வழித்தடத்தில் இயக்க புதிய பஸ்கள் ஒதுக்கப்படுவதில்லை. உடைப்புக்கு அனுப்பப்பட்ட பஸ்களுக்கு மாற்றாக, பெருநகரங்களில் இயக்கப்பட்ட பஸ்களை பயன்படுத்தலாம். மொபசல் பஸ் இயக்கப்படுவதால், பஸ்சினுள் நிற்பதற்கான இடம் குறைந்து இடநெருக்கடி ஏற்படுகிறது. அடுத்தடுத்த ஸ்டாப்புகளில் வேகமாக இறங்க முடியாமல் பெண்கள், முதியவர்கள் பாதிக்கின்றனர். துறை ரீதியான அதிகாரிகளின் நடவடிக்கை அவசியம். இவ்வாறு, கூறினர்.