உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாதந்தோறும் ரூ.1.5 லட்சம் அபராதம்; மின் முறைகேடு தடுப்பு தீவிரம்

மாதந்தோறும் ரூ.1.5 லட்சம் அபராதம்; மின் முறைகேடு தடுப்பு தீவிரம்

பொள்ளாச்சி; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பொள்ளாச்சி மின்கோட்டத்தில், மின் முறைகேடு தொடர்பாக, மாதந்தோறும், மின்கோட்ட அளவில், சராசரியாக 1.5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், வீடு, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளுக்கும், மின்வாரியம் வினியோகம் செய்கிறது. அதன்படி, பொள்ளாச்சி கோட்டத்தில், வீடு, தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வணிகம் என, மொத்தம், 1,59,732 மின் இணைப்புகள் உள்ளன. அவற்றில், வணிக ரீதியாக, 18,073 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், சிலர், அங்கீகாரமின்றி மின்சாரத்தை உபயோகித்தல், மின் துறை ஒப்புதலுக்கு அப்பாற்பட்ட மின் உபயோகம், மின்அளவீட்டு கருவியை சேதப்படுத்தி மின்சாரத்தை உபயோகிக்கின்றனர். மேலும், மின்சாரம் இணைப்பு வழங்கப்பட்ட கட்டடம் அல்லாத வேறு இடங்களுக்கு மின் வினியோகம் செய்தல் அல்லது பயன்படுத்துதல் என, முறைகேடுகள் தொடர்கிறது. இதனை தடுக்கும் வகையில், அவ்வப்போது, மின்வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஆய்வும் நடத்துகின்றனர். அவ்வகையில், மின்கோட்ட அளவில், மாதந்தோறும், சராசரியாக 1.5 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பொதுமக்கள் சட்ட விரோதமாக, முறையற்ற வழியில் தாமாகவே மின் இணைப்பை ஏற்படுத்தி, மின்சாரத்தை பயன்படுத்துவது உள்ளிட்டவை மின்சாரச் சட்டம் 2003, மின் திருட்டு விதி எண் 135-ன்படி தண்டனை, அபராதத்துக்குரிய குற்றமாகும். அதேபோல, வீட்டு நுகர்வோர் தங்கள் மின்சார இணைப்பை வணிக, தொழில்துறை மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்குத் திருப்பி விடவோ அல்லது பிற வீடுகளுக்கு மின்சாரம் வழங்க இணைப்பைப் பயன்படுத்தவோ கூடாது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் விவசாயம் மற்றும் விவசாய நோக்கங்களுக்காக மட்டுமே இருத்தல் வேண்டும். மின் சார்ந்த முறைகேட்டை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விதிமீறலுக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ