எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விலை உயர்வு: திரும்ப பெற வலியுறுத்தி மனு
பொள்ளாச்சி; 'கிரஷர் உரிமையாளர்கள் உயர்த்தியுள்ள கட்டுமான துறையை பாதிக்கும் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி கற்கள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார்.பொள்ளாச்சி அசோசியேசன் ஆப் சிவில் இன்ஜினியர்ஸ் சங்கம் சார்பில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:கல்குவாரி கிரஷர் உரிமையாளர்கள் கூட்டத்தில், டிச., 1ம் தேதி முதல் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி கற்கள் விலையை, ஒரு யூனிட்டுக்கு, 1,000 ரூபாய் வரை உயர்த்துவதாக முடிவு செய்து, தற்போது உயர்த்தியுள்ளனர்.சமீபத்தில் தான் கிரஷர் உரிமையாளர்கள், விலையை உயர்த்தினர். தற்போது மீண்டும் விலை உயர்வு என்பது பொதுமக்கள், கட்டுமான துறையில் ஈடுபட்டுள்ள கட்டுமான தொழிலாளர்கள், கட்டட பொருட்கள் விற்பனையாளர்கள், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஆகியோருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.இந்த விலை உயர்வால் நடந்து கொண்டு இருக்கும் கட்டட வேலைகள் பாதிப்புக்குள்ளாகும் மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் குறையும்.விலை உயர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துக்காக தற்போது பொருட்களை கிரஷர் உரிமையாளர்கள் வழங்காமல் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி வருகின்றனர். இதனால், கட்டுமான வேலைகள் ஸ்தம்பிக்கும் நிலையில் உள்ளது.எனவே, கட்டுமான துறையை பெரும் பாதிப்புக்குள்ளாகும் விலை உயர்வை திரும்ப பெற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதும், இந்த விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. எனவே, மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை திறப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவும் பரிந்துரை செய்ய வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மீது புகார்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி தனியார் பள்ளிகளில், அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை நாளான டிச., 26, 27, 30 ஆகிய நாட்களில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களை, சிறப்பு வகுப்புக்கு பள்ளிக்கு வர வேண்டுமென்று வாய்மொழியாக கூறப்பட்டுள்ளது. இது, தமிழக அரசின் உத்தரவை மீறும் செயல் ஆகும்.இது குறித்து, பொள்ளாச்சியில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் விடுமுறை காலங்களில், அரசின் உத்தரவை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.