உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மூளை காய்ச்சல் நோய் அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் நகராட்சி கமிஷனர் அறிவுரை

 மூளை காய்ச்சல் நோய் அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் நகராட்சி கமிஷனர் அறிவுரை

பொள்ளாச்சி: 'மூளைக்காய்ச்சல் நோய் அறிகுறி தென்பட்டால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும்,' என நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் குமரன் அறிக்கை: அமீபிக் மூளைக்காய்ச்சல், நெய்கெலேரியா பவுளேரி என்ற மூளையை திண்ணும் அமீபா கிருமியால் ஏற்படுகிறது. இது ஒரு அரிதான மூளை காய்ச்சல் நோயாகும். சமீபத்தில் கேரளா மாநிலத்தில் நோய் தொற்று தொடர்ந்து பதிவாகி வருவதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. மாசடைந்த அல்லது தேங்கி நிற்கும் சுத்தமில்லாத நீர்நிலைகளில் இந்த கிருமி இருக்க வாய்ப்புள்ளது. இத்தகைய நீர் நிலைகளில், குளிக்கும் போது அமீபா கிருமி மூக்கு வழியாக மூளைக்கு சென்று தொற்று ஏற்படுத்தும். இந்த நோய் மனிதரிடம் இருந்து மனிதருக்கு பரவாது. கடுமையான தலைவலி, காய்ச்சல், வாந்தி, கழுத்துவலி, வலிப்பு, மயக்கம் ஆகியவை அறிகுறிகளாக உள்ளன. சரியான சிகிச்சை இல்லையெனில் உயிரிழப்பு ஏற்படும்.அதனால், குழந்தைகள், பொதுமக்கள் மாசடைந்து நிற்கும் அல்லது சுத்தமில்லாத நீரில் நீந்துதல், குளித்தல் அல்லது விளையாடுதலை தவிர்க்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நீச்சல் குளங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்த பின்னரே குளிக்க வேண்டும்.மூளை காய்ச்சல் அறிகுறிகள் ஏதேனும் நீர் நிலைகளில் குளித்தப்பிறகு தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கொதிக்க வைத்த குடிநீரை பருக வேண்டும். கேரளா செல்லும் பக்தர்கள், புனித நீராடும் போது, கண், காது, மூக்கை பாதுகாப்பாக மூடிக்குளிப்பது நல்லது. அசுத்தமான ஆறுகள், நீரோடைகள், குளங்களில் நீராடுவதை தவிர்ப்பது நல்லது. பொதுமக்கள் இந்நோய் குறித்து பீதியடைய தேவையில்லை. இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி