உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர், பாதாள சாக்கடை கட்டணங்கள் உயர்வு; கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை மா.கம்யூ., முற்றுகை

குடிநீர், பாதாள சாக்கடை கட்டணங்கள் உயர்வு; கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை மா.கம்யூ., முற்றுகை

கோவை,; கோவையில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புக்கான வைப்புத்தொகை மற்றும் மாதாந்திர கட்டணத்தை உயர்த்தி, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, ரத்து செய்யக்கோரி, மாநகராட்சி அலுவலகத்தை மா.கம்யூ.,வினர் நேற்று முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை மாநகராட்சியில், 14ம் தேதி நடந்த மாமன்ற அவசர கூட்டத்தில், 'பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை மற்றும் மாதாந்திர கட்டணத்தை, கட்டடத்தின் சதுரடி கணக்கில் உயர்த்தப்பட்டது. இனி, ஆண்டுதோறும் மூன்று சதவீதம் உயர்த்தப்படும். அக்கட்டணம் செலுத்தாவிட்டால், அபராதம் விதிக்கப்படும்' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநகராட்சிக்கு கண்டனம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தீர்மானங்களை ரத்து செய்யக்கோரியும், மா. கம்யூ., கோவை மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் வந்த கட்சியினர், மாநகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.அதன்பின், பத்மநாபன் நிருபர்களிடம் கூறியதாவது:பாதாள சாக்கடை அமைக்கும்போது, சாலைகள் சேதாரத்துக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை தெரியப்படுத்தாமல், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆண்டுக்கு மூன்று சதவீதம் உயர்வு சரியானது அல்ல. பாதாள சாக்கடை இணைப்புக்கான வைப்புத்தொகை, மிக அபரிமிதமானது. ஏற்கனவே இணைப்பு பெற்றவர்களும், வைப்புத்தொகை செலுத்த வேண்டுமெனச் சொல்வது, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. கட்டட பரப்பளவுக்கு ஏற்ப வைப்புத்தொகை, குடிநீர் கட்டணம் நிர்ணயிப்பது வணிக நோக்கம் சார்ந்தது. குடிநீர் வினியோகத்தை வணிக மயமாக்குவதை ஏற்க மாட்டோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

போலீசார் காயம்

போராட்டத்தில் ஈடுபட்ட மா.கம் யூ., கட்சியினர், அலுவலக நுழைவாயில் கேட்டை திறந்து நுழைய முயன்றபோது, போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கட்சியினர் உள்ளே நுழைவதை தடுக்கச் முயன்ற போலீசாரில் மூவருக்கு கால், கைகளில் லேசான காயம் ஏற்பட்டது. பின், 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி