ரெண்டு மர்டர் பண்ணியிருக்காரு என் வீட்டுக்காரரு...தெரிஞ்சுக்கோ! மிரட்டிய இளம்பெண் உட்பட மூவர் கைது
கோவை : கணவர் மீது புகார் அளித்த பெண்ணுக்கு, மிரட்டல் விடுத்த இளம்பெண், உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.கோவையை சேர்ந்தவர், 30 வயது பெண். இவர் தனது தாயாருடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சுங்கத்தை சேர்ந்த மன்சூர் அலி, 35 என்பவர் அறிமுகமானார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். மன்சூர் அலி, அந்த பெண்ணை தனக்கு கட்டுப்பட வேண்டும், தனது விருப்பப்படி நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.அதற்கு அந்த பெண் கட்டுப்படாததால், மன்சூர் அலி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரது நடத்தையை தவறாக கூறி, மிரட்டல் விடுத்தார். அந்த பெண் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வந்தனர்.நேற்று முன்தினம் மன்சூர் அலி, மற்றும் அவரது மனைவி சஜினா, உறவினர்கள் சாதிக், இஸ்மாயில் ஆகியோர் பதிவு செய்யப்படாத காரில், அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்தனர்.அங்கு சஜினா, அந்த பெண்ணிடம், 'எனது கணவர் ஏற்கனவே இரண்டு கொலைகளை செய்து உள்ளார்; புகாரை திரும்ப பெறவில்லை என்றால், அதேபோன்று உனது குடும்பத்திலும் கொலை நடக்கும்' என மிரட்டி சென்றார்.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து சஜினா, 28, சாதிக், 42, இஸ்மாயில், 25 ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தலைமறைவான மன்சூர் அலியை தேடி வருகின்றனர்.