பிரபல கோவை டாக்டரின் வாட்ஸ்ஆப் எண்ணை ஹேக் செய்த மர்மநபர்கள்
கோவை; பிரபல சர்க்கரை நோயியல் டாக்டரின், வாட்ஸ்ஆப் எண் மர்மநபர்களால் 'ஹேக்' செய்யப்பட்டது.கோவையை சேர்ந்தவர் பிரபல சர்க்கரை நோயியல் டாக்டர். இவரது வாட்ஸ் ஆப் எண்ணில் இருந்து நேற்று காலை 9:00 மணியளவில், பலருக்கும் தகவல் அனுப்பப்பட்டது. அதில், 'எனக்கு தெரிந்தவருக்கு ரூ.15 ஆயிரம் அனுப்ப முயற்சித்தேன். தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனுப்ப முடியவில்லை. தங்களால் அதை அனுப்ப முடியுமா. மாலையில் திருப்பி தந்து விடுகிறேன்' என, கோரப்பட்டிருந்தது.இதை உண்மை என நம்பிய சிலர், அதில் தெரிவிக்கப்பட்டிருந்த எண்ணுக்கு பணத்தை அனுப்பினர். டாக்டரின் நெருங்கிய நண்பர்களுக்கு, இச்செய்தி குறித்து சந்தேகம் ஏற்பட்டதால், டாக்டரை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்தனர்.அதற்குள் சிலர், மர்ம நபர்கள் தெரிவித்த எண்ணுக்கு பணத்தை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தனது நண்பர்களுக்கு டாக்டர் தகவல் தெரிவித்தார். உஷாரான அவரது நண்பர்கள் பணம் அனுப்புவதை தவிர்த்தனர்.இதுகுறித்து, டாக்டர் கூறுகையில், 'இதுபோன்ற தகவல்கள் வரும் போது, அதுகுறித்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். யாரிடம் இருந்து தகவல் வருகிறதோ, அவர்களை தொடர்பு கொண்டு தகவலை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற பெரும்பாலான தகவல்கள், மோசடிக்கு விரிக்கும் வலையாக இருக்கும். எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்' என்றார்.