தேசிய கராத்தே, சிலம்ப போட்டி: திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடந்த கராத்தே மற்றும் சிலம்ப போட்டியில், வீரர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். பொள்ளாச்சியில், இன்டர்நேஷனல் சிந்தோகான் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில், 28வது தேசிய கராத்தே மற்றும் சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது. நகராட்சி தலைவர் சியாமளா, சர்வதேச சிந்தோகான் கராத்தே டோ மாநில துணை தலைவர் நித்யானந்தன், தொழிலதிபர் காமராஜ் ஆகியோர், போட்டிகளை துவக்கி வைத்தனர். அதில், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட கராத்தே, சிலம்ப வீரர்கள் பங்கேற்றனர். 20 கிலோ எடைப்பிரிவில் இருந்து, 70 கிலோவுக்கு மேற்பட்டது என பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. கட்டா, டீம் கட்டா, குமிட்டோ, டீம் குமிட்டோ பிரிவுகளில், வீரர்கள் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். போட்டிகளில் பங்கேற்றோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. தலைமை பயிற்சியாளர் பஞ்சலிங்கம் கூறியதாவது: தேசிய அளவிலான கராத்தே போட்டியில், வயது, எடை வாரியாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் முதல் இரண்டு இடம் பெற்ற மாணவர்கள், சர்வதேச அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். மேலும், வரும், 20ம் தேதி ஜப்பான், கனடா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, பயிற்சியாளர்கள் பொள்ளாச்சிக்கு வருகின்றனர். இங்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடக்கிறது. அதில் பங்கேற்க இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஜப்பானில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க ஓர் ஆண்டுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதே போன்று, சிலம்ப போட்டிகளும், பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெறுவோர், மலேசியாவில் நடைபெறும் சிலம்ப போட்டிக்கு தகுதி பெறுவர். இவ்வாறு, கூறினார்.