நவபாரத் தேசியப் பள்ளி விளையாட்டு விழா
அன்னுார்; அன்னுார் நவபாரத் தேசியப் பள்ளியில், 19வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. தேசிய மற்றும் ஒலிம்பிக் கொடியை பள்ளி இயக்குனர் ரகுராம் ஏற்றினார். பள்ளி முதல்வர் சந்திரன் வரவேற்றார். சாரண சாரணியர், தேசிய மாணவர் படை மாணவ, மாணவியரின் அணிவகுப்பு நடந்தது. தடகளம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகள் பெற்று ஒமேகா அணி முதலிடமும், அக்னி அணி இரண்டாம் இடமும், விக்ராந்த் அணி மூன்றாம் இடமும், பிரிதிவி அணி நான்காம் இடமும் வென்றன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. தேசிய 'கோ-கோ' வீரர் சுப்பிரமணி பேசுகையில், ''நம்மை பிறர் விமர்சிப்பதை பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நிச்சயமாக தேசிய அளவில் மாணவர்கள் சாதிக்க முடியும்,'' என்றார். விழாவில் பள்ளி நிர்வாகிகள் நித்தியானந்தம் சண்முகசுந்தரம், சுவாமிநாதன், செல்வராஜ், வெங்கடாசலம், செந்தில், டாக்டர்கள் தங்கவேல், குமரேசன் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி செயலர் நந்தகுமார் நன்றி தெரிவித்தார்.