உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விமான நிலையத்துக்கு கூடுதல் பஸ் வேண்டும்! 

விமான நிலையத்துக்கு கூடுதல் பஸ் வேண்டும்! 

கோவை; கோவை விமான நிலைய வளாகம் வரை செல்ல, கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், விமான நிலைய வளாகம் வரை பஸ் சென்று திரும்ப, இட வசதி செய்து தர வேண்டும் என, அரசு போக்குவரத்துத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.கோவை சர்வதேச விமான நிலையம், 1940ல் கட்டப்பட்டது. 1987ல், பெரிய ஜெட் விமானங்களைக் கையாளும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டது. 2012ல் சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டது. தற்போது விமான நிலைய விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கவுள்ளன.கோவை விமான நிலையத்தில் இருந்து, வரும் 27ம் தேதி சிங்கப்பூருக்கான புதிய விமான சேவை துவங்கவுள்ளது. இதையும் சேர்த்தால், தினமும் சராசரியாக 30 விமான சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்தை, சராசரியாக மாதம் 2.8 லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். வரும் மாதத்தில் இது, தினசரி 10 ஆயிரமாக உயரும்.இந்த விமான நிலையம், 24 மணி நேரமும் செயல்படுவதற்கான உரிமம் பெற்றுள்ளதால், அதிகாலை முதல் நள்ளிரவு வரை, தொடர்ந்து விமான சேவை வழங்கப்படுகிறது. விமான சேவையை, இன்று நடுத்தர மக்களும், பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், விமான நிலையத்துக்கு பஸ் போக்குவரத்து குறைவாக இருக்கிறது என்பது பெரும் குறையாக உள்ளது. தற்போது 83 ஏ, 20 ஆகிய எண் கொண்ட பஸ்கள் மட்டுமே இயங்குகின்றன. இது போதாது என்கின்றனர் பயணிகள். அருகில் உள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள், உள்நாட்டு விமானப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவோர், அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலும் விமான நிலையம் செல்ல, பஸ் போக்குவரத்தை விரும்புகின்றனர்.அதிக பஸ்கள் இல்லாததால், தற்போது அவிநாசி சாலை சிட்ராவில் இறங்கி, சுமார் 1 கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. வாடகைக் கார்கள், ஆட்டோக்களில், விமானநிலையத்துக்குச் சென்று திரும்ப வேண்டியுள்ளது. இந்த வாகனங்களில், வாடகை அதிகமாக இருப்பதாக கூறும் பயணிகள், கூடுதல் அரசு பஸ்களை, விமான நிலைய நுழைவுவாயில் வரை இயக்கினால், வசதியாக இருக்கும் என்கின்றனர்.சமீபத்தில் சென்னையில் கனமழை பெய்தபோது, வாடகைக் கார்கள், ஆட்டோ இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், அரசே பஸ்களை இயக்கியது. எனவே, இங்கும் பஸ்களை இயக்குவதில் நிர்வாகச் சிக்கல்கள் ஏதுமிருக்காது. ஆகவே, கோவை விமான நிலையத்துக்கென பிரத்யேக பஸ்களை, கூடுதலாக இயக்க, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

'இடம் தாருங்கள் பஸ் இயக்குகிறோம்'

பெயர் வெளியிட விரும்பாத அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:விமான நிலைய நுழைவு வாயில் வரை, பஸ் சென்று திரும்புவதில் சிரமம் உள்ளது. விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பிருந்தாவன் நகருக்கு, '83 ஏ' வழித்தட எண் தற்போது இயக்கப்படுகிறது. விமான நிலையத்துக்கே சென்று திரும்பும் அளவுக்கு, வழிவகை செய்ய மாவட்ட நிர்வாகமும், விமான நிலைய நிர்வாகமும் முன்வந்தால், குறிப்பிட்ட இடைவெளியில் அரசு பஸ்களை இயக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை