கோவையின் தேவை!
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சமயங்களில், முந்தைய ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை நிறுத்தி வைப்பதோ அல்லது முடக்கி விடுவதோ வாடிக்கை. வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணியை மீண்டும் தொடர்ந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென்கிற கோரிக்கை தெற்குப்பகுதி மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் வழியாக தற்போது ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதிகமான பயணிகள் போத்தனுாரை பயன்படுத்த ஆரம்பித்து இருப்பதால், வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுமானத்தை முழுமையாக முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், லட்சக்கணக்கான மக்கள் பயனடைவர். கோவையின் தெற்குப்பகுதி வளர்ச்சி அடையும்.இத்திட்டத்தில் இதுவரை, 37 சதவீதம் கட்டுமான பணி முடிந்திருக்கிறது; மாநகராட்சி பங்களிப்பு தொகை ரூ.52.46 கோடிசெலவழிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பங்களிப்பு தொகை ரூ.84 கோடி விடுவிக்க வேண்டும். அந்நிதியை விடுவித்து செயல்படுத்தினால், பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வரும்.தற்போது மேற்குப்புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. எல் அண்டு டி பைபாஸ் விரிவாக்கம் செய்யும்போது, நகரம் பெருமளவில் வளர்ச்சி அடையும். நகர்ப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாது. முதல்வரின் கடைக்கண் பார்வைக்காகவும், அவரது அறிவிப்புக்காகவும் தெற்குப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.