உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் 14 மையங்களில் நீட் தேர்வு; 5,736 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்

கோவையில் 14 மையங்களில் நீட் தேர்வு; 5,736 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்

கோவை; கோவையில் நாளை நடக்கவுள்ள நீட் தேர்வுக்காக, 14 மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 5,736 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவுள்ளனர்.தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.,) அமைப்பு சார்பில், நீட்., தேர்வுகள் ஒருங்கிணைத்து நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகள், இளநிலை மருத்துவப்படிப்புகளுக்காக நடத்தப்படுகிறது. நாடு முழுவதும், 21 லட்சம் மாணவர்கள், இத்தேர்வை எதிர்கொள்ளவுள்ளனர். கோவை மாவட்டத்தில், 5,736 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். இத்தேர்வுகள், நாளை மதியம் 2:00 முதல் 5:00 மணி வரை நடைபெறவுள்ளது.கோவையில் நீட் தேர்வுகளுக்காக, டவுன்ஹால் சி.சி.எம்.ஏ., அரசு மகளிர் பள்ளி, கோவை அரசு கலைக்கல்லுாரி, அவினாசிலிங்கம் கல்விநிறுவனம் (இரண்டு மையங்கள்), அரசு தொழில்நுட்ப கல்லுாரி, கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி, அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, சி.ஐ.டி., கிருஷ்ணம்மாள் கல்லுாரி ( இரண்டு மையங்கள்) என 14 மையங்கள், தயார்நிலையில் உள்ளன.இம்மையங்களில், போதிய வசதிகள் உள்ளதா என்பது குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், நேற்று உறுதிசெய்தனர்.இதுகுறித்து, கோவை மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் குமார் மிஸ்ரா கூறியதாவது:கோவையில் தேர்வுக்கான, அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளன. தேவையான அளவில் பறக்கும்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் அச்சிடப்பட்ட நுழைவுச்சீட்டுடன் வரவேண்டும்; நுழைவுச்சீட்டு இன்றி மையங்களுக்குள் அனுமதி இல்லை. வெளிப்படையாக தெரியும், தண்ணீர் பாட்டில் அனுமதிக்கப்படும். பேனா உட்பட எவ்வித பொருட்களும் அனுமதிக்கப்படாது. பேனா தேர்வு மையத்தில் வழங்கப்படும். நுழைவுச்சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை, முழுமையாக படித்து அதன்படி செயல்படவேண்டும். என்.டி.ஏ., இணையதளத்தில் தடை விதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத பொருட்கள் குறித்தும் அறிந்துகொள்ள வேண்டும். பேனா, கேமரா, நகைகள், மொபைல், வாட்ச் போன்ற பொருட்கள் அனுமதிக்கப்படாது.மாணவர்கள், 11:00 மணிக்கே மையங்களுக்கு வந்துவிட வேண்டும். 1:30 மணிக்கு மேல் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக்கு ஒரு நாள் முன்பே, மையங்களை நேடியாக பார்த்துக்கொள்வது தேவையற்ற தாமதத்தை தவிர்க்கும். எளிதான, சாதாரண உடைகளை உடுத்தி வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை