நெகமம் அரசுப்பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே நெகமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது.தமிழக அரசு, ஆண்டு தோறும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கற்றல், கற்பித்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து கேடயம் வழங்குகிறது.அதன்படி, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நெகமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருது, சென்னையில் நடந்த விழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வழங்கினார். சிறந்த பள்ளி விருது பெற்றதற்காக பெற்றோர், பள்ளி மேலாண்மை குழுவினர் உள்ளிட்ட பலரும் பள்ளி நிர்வாகத்துக்கு பாராட்டு தெரிவித்தனர்.ஆசிரியர்கள் கூறியதாவது:ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்களின் முயற்சியால் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாணவர்களின் படைப்பாற்றலை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சிறந்த பள்ளியாக தமிழக அரசு தேர்வு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மேலும், ஊக்கத்தை கொடுத்து பணிகளை செய்ய உதவும். இவ்வாறு, கூறினர்.