26 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடம்
கோவை, : கோவை மாவட்டத்தில், 26 சுகாதார நிலையங்களுக்கு புதிதாக கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. தமிழகத்தில், ஒவ்வொரு 5000 மக்கள் தொகைக்கும், ஒரு துணை சுகாதார நிலையம் ஏற்படுத்தப்படுகிறது. கிராம சுகாதார செவிலியர்கள் இங்கு பணியில் இருப்பர். சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், பல்வேறு பதிவேடுகள் பராமரித்தல், கர்ப்பிணிகளின் பதிவுகள், கர்ப்பிணிகளுக்கு வழங்கும் தடுப்பூசிகள், தவிர சிறிய அளவிலான காயங்கள், உடல் பிரச்னைகளுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாநில அளவில், வாடகை மற்றும் பழைய கட்டடங்களில் செயல்பட்டு வரும், 300 சுகாதார நிலையங்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில், 137 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறுகையில், ''கோவையில், 26 துணை சுகாதார நிலையங்கள், பழைய சுகாதார நிலைய கட்டடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்கு, புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. விரைவில் பணிகள் துவங்கும், '' என்றார்.