உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சுண்டக்காமுத்துார் குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல மாநகராட்சி புது திட்டம்

 சுண்டக்காமுத்துார் குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல மாநகராட்சி புது திட்டம்

கோவை: கடந்த 20 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் சுண்டக்காமுத்துார் குளத்துக்கு செங்குளத்தின் உபரி நீரை கொண்டு வருவதற்கான முயற்சியில் மாநகராட்சி இறங்கியுள்ளது. இதற்காக, 90 லட்சம் ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. கோவை மாநகராட்சி, 89வது வார்டில் சுண்டக்காமுத்துார் குளம் 7.25 ஏக்கரில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் மலைப்பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் மழை நீர், விளைநிலங்கள் வழியாக சுண்டக்காமுத்தார் குளத்துக்கு வந்தடையும். குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நீலத்தடி நீர் மட்டம் உயர்ந்து ஆழ்குழாய் கிணறுகள், திறந்தவெளி கிணறுகளின் நீர் மட்டம் நல்ல நிலையில் இருந்தது. இப்பகுதியில் உள்ள நிலங்கள் லே-அவுட்டுகளாக மாற்றப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சாலைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதால் சேகரமாகும் மழை நீர், சுண்டக்காமுத்துார் குளத்துக்கு வருவதில்லை. அதனால், குனியமுத்துார் செங்குளத்துக்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்காலில் செல்லும் தண்ணீரை சுண்டக்காமுத்துார் குளத்துக்கு அனுப்புவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அவ்விடத்தை நேரில் ஆய்வு செய்தார். செங்குளம் நிரம்பியதும் உபரி நீர் மதுக்கரைக்கு செல்கிறது. அந்த வாய்க்காலில் செல்லும் தண்ணீரின் ஒரு பகுதியை சுண்டக்காமுத்துார் குளத்துக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மழைக்காலங்களில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சுண்டக்காமுத்துார் குளம் வறண்டு காணப்படுகிறது. அக்குளத்துக்கு ஆற்று நீரை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. செங்குளத்தின் உபரி நீர் மதுக்கரை செல்லும் வழித்தடத்தில், குமரன் கார்டனில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நீர் சேமிப்பு கிணறு அமைக்கப்படும். அங்கிருந்து 1 கி.மீ. துாரத்துக்கு குழாய் பதித்து குளத்துக்கு தண்ணீரை 'பம்ப்' செய்து கொண்டு செல்லப்படும். இதனால், சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதற்காக, 90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ