அடுக்குமாடி நிறைந்த பகுதியில் புது ஓட்டுச்சாவடி வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தகவல்
கோவை: அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் ஓட்டுச்சாவடி அமைக்கவேண்டி இருப்பின், அரசியல் கட்சி பிரமுகர்கள் தகவல் தெரிவித்தால் அதன் அடிப்படையில் புதிய ஓட்டுச்சாவடி அமைகக்கலாம் என்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கூறினார்.கோவை மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண் இயக்குநர் மகேஸ்வரன் தலைமையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரன் பேசியதாவது: கோவை நகர்புறத்தில், 2,201 ஓட்டுச்சாவடிகளும், கிராமப் பகுதிகளில், 916 ஓட்டுச்சாவடிகள் என மொத்தம் 3,117 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், இறந்த வாக்காளர் பதிவை நீக்குதல், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார்எண் இணைத்தல், அயல்நாடு வாழ் இந்தியர் பெயர்கள் சேர்த்தல், முகவரி மாற்றம் செய்தல், மாற்றுத்திறனாளிகள் குறியீடு செய்தல், நகல் அடையாள அட்டை பெறுதல் மற்றும் ஏற்கனவே உள்ள தரவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. மேலும், 28.11.2024 வரை அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலகங்களில் மேற்காணும் நடவடிக்கை தொடர்பாக படிவங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். அதன்படி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் வரும், 16, 17, 23, 24 ஆகிய நான்கு நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டி இருப்பின், அரசியல் கட்சி பிரமுகர்கள் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொள்ளாச்சி சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யா, வருவாய் கோட்டாட்சியர்கள் கோவிந்தன், ராம்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில்வடிவு, தேர்தல் பிரிவு தாசில்தார் தணிகைவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.