புதிய தொழில்நுட்பங்களால் அதிக லாபம் ஈட்டலாம்
மேட்டுப்பாளையம்; 'புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றினால், விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம்' என, வேளாண் மாணவியர் தெரிவித்தனர்.தென்னை விவசாயிகள் பயனடையும் வகையில், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காட்டில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை மாணவியர் செயல்முறை விளக்க கூட்டத்தை நடத்தினர்.இதில், கொப்பரையில் அதிக மகசூல் பெறுவதற்கான நவீன நுட்பங்கள் குறித்து மாணவியர் விளக்கங்களை அளித்தனர். மேலும், தாவர பாதுகாப்பு, நீர்ப்பாசனத்திற்கான உகந்த முறை, உரமிடுதல், அணில் தொல்லை, குரும்பை உதிர்வு, வெள்ளை ஈ தாக்குதல், அழுகல் நோய் தீர்வு முறைகளை வழங்கினர். விவசாயிகள் தங்கள் சந்தேகங்களை மாணவியரிடம் நேரடியாக கேட்டு, தீர்வுகளை பெற்றனர்.வேளாண் பல்கலை மாணவியர் கூறுகையில், 'புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றினால், மகசூல் அதிகரித்து, விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடியும்' என்றனர்.