செயற்கை புல் வேண்டாம்; ரூ.4.6 கோடி கருகி விடும்
கோவை; கோவையில் மேம்பாலங்களுக்கு கீழுள்ள மையத்தடுப்புகளில், செயற்கை புல் பதிப்பதை நெடுஞ்சாலைத்துறையினர் கைவிட வேண்டும். கோவை மேம்பாலங்களின் கீழ்ப்புறத்தில் உள்ள மையத்தடுப்புகளில், செயற்கை புற்கள் பதிக்கப்படுகின்றன. இவை நாளடைவில் பராமரிப்பின்றி வீணாகின்றன.உதாரணத்துக்கு, உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை கட்டியுள்ள மேம்பாலத்துக்கு கீழே அழகுச்செடிகள் வளர்க்கிறோம் என்ற பெயரில், பெருந்தொகையை செலவிட்டு, செயற்கை புற்களை நெடுஞ்சாலைத்துறையினர் பதித்தனர். பராமரிப்பின்றி கருகி விட்டன. இதற்காக செலவிடப்பட்ட பல லட்சம் ரூபாய் வீணாகி விட்டது.இதேபோல், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு கட்டப்படும் மேம்பாலத்துக்கு கீழுள்ள மையத்தடுப்புகளில் செடிகள் வளர்ப்பதற்காக, 4.6 கோடி ரூபாயை நெடுஞ்சாலைத்துறை ஒதுக்கியுள்ளது. மேம்பாலத்தின் மேற்பரப்பிலும் செடிகள் வளர்க்க அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. அங்கு தொட்டியில் செடி வளர்க்கலாமா என்கிற, ஆலோசனை நடந்து வருகிறது. தொட்டியில் செடி வளர்த்தால், தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிப்பது யார்? இது மாநகராட்சி நிதியை வீணாக்குவதாக பார்க்க வேண்டியிருக்கிறது.
தடுக்கவே இச்செடிகள்
மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழுவினரிடம் கேட்ட போது, 'நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் எதிர்திசையில் வரும் வாகனங்களின், வெளிச்சத்தை தடுக்கும் வகையில் மையத்தடுப்புகளில் செடிகள் நடப்படும்' என்றனர். மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'செயற்கை புல் தவிர்த்து, இயற்கை செடிகளை நடுவோம். மேம்பாலத்தின் மேற்பரப்பில் மையத்தடுப்பு பகுதியில், தொட்டியில் செடிகள் வளர்க்கலாமா என ஆலோசித்து வருகிறோம்' என்றனர்.