தாயுமானவர் திட்டத்தில் ப்ளூடூத் வேண்டாம்
கோவை: தாயுமானவர் திட்டத்தில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு வினியோகம் செய்யும் நாளில், 'ப்ளூடூத்' பதிவு முறையை, அன்று மட்டும் ரத்து செய்யவேண்டும் என, ரேஷன் கடைப் பணியாளர்கள் சங்கம் சார்பில், பொது வினியோக திட்ட இயக்குனருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் மாநிலத்தலைவர் ராஜேந்திரன் கூறியிருப்பதாவது: தாயுமானவர் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள், பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களாகவும், உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் இருப்பதால், கைரேகை மற்றும் கருவிழி பதிவு செய்ய முடியவில்லை. அதனால் தாயுமானவர் திட்டத்தில் உள்ள, ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வினியோகம் செய்யும் நாளில் 'ப்ளூடூத்' பதிவு முறையை, அன்று மட்டும் ரத்து செய்யவேண்டும். கைரேகை பலமுறை முயற்சி செய்தாலும் விழாத பட்சத்தில், அவரது குடும்ப அட்டையில் அவர் விரும்பும் வேறொரு குடும்ப உறுப்பினரின் ஆதார் எண் இணைக்கப்பட்டு, நாமினி பதிவு என்ற முறையில் பொருட்கள் வழங்க உத்தரவிட வேண்டும். பொருட்கள் வழங்கும் போது, விற்பனையாளர்களுக்கு ஒரு உதவியாளர் அவசியம் தேவை. பொருள் வினியோக நாளில், எந்த காரணம் கொண்டும் சர்வர் பிரச்னை ஏற்பட கூடாது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.