உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முக்கோணத்தில் ரவுண்டானா இல்லை; நெரிசலுக்கு தீர்வில்லை!

முக்கோணத்தில் ரவுண்டானா இல்லை; நெரிசலுக்கு தீர்வில்லை!

இணைப்பு ரோடு தேவை

உடுமலை வேடப்பட்டி அருகே, புதிதாக நான்கு வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலைக்கு இணைப்பு ரோடு போடப்படாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர். விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.- மோகன்குமார், உடுமலை.

போக்குவரத்து நெரிசல்

மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டுக்குள், மப்ஸல் பஸ்கள் செல்லாமல், தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராமச்சந்திரன், உடுமலை.

இருக்கை வசதியில்லை

உடுமலை பஸ் ஸ்டாண்டில், பழநி பஸ்கள் நிற்கும் பகுதியில், போதிய இருக்கை வசதியில்லாததால், பயணியர் சிரமப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மயில்சாமி, உடுமலை.

ரோட்டில் பள்ளம்

உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்கள் வெளியேறும் பகுதியில், ரோட்டில் கற்கள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இரு சக்கர வாகன ஓட்டுநர்களும் பாதிக்கப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- செல்வம், உடுமலை.

கழிவுகளால் துர்நாற்றம்

உடுமலை ராஜவாய்க்கால் பள்ளத்தையொட்டி கழிவுகளை ரோட்டோரத்தில் வீசி செல்வதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் நிலவுகிறது.- மகேஸ்வரன், உடுமலை.

ரவுண்டானா தேவை

உடுமலை முக்கோணம் சந்திப்பில், ரவுண்டானா இல்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நீண்ட காலமாக நீடிக்கும் பிரச்னைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.- வினோத்குமார், உடுமலை.

மாசடையும் குடிநீர்

ஜல்லிபட்டி ஊராட்சி தினைக்குளம் பகுதியில், கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. அப்பகுதி முழுவதும் கழிவுகள் குவிந்துள்ளதால், குடிநீர் மாசடைந்து வருகிறது.- மூர்த்தி, உடுமலை.

தடுப்புகள் அமைக்கணும்!

வால்பாறை அருகே உள்ள, அய்யர்பாடி ரோப்வேவில் இருந்து ரொட்டிக்கடை செல்லும் ரோட்டின் ஓரத்தில், தடுப்புகள் இல்லாததால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தங்கராஜ், ரொட்டிக்கடை.

நடைபாதை ஆக்கிரமிப்பு

கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் உள்ள நடைபாதையை, கடை வைத்திருப்பவர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பொருட்களை வைத்து அடைத்துள்ளனர். இதனால், நடைபாதையில் செல்லும் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை பேரூராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.- சந்தோஷ், கிணத்துக்கடவு.

கழிவை அகற்றணும்

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, நடைபாதையில் அதிகளவு குப்பை கழிவு கொட்டப்படுகிறது. இதனால், அவ்வழியில் செல்பவர்களுக்கு சிரமம் ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இங்கே குப்பை கொட்டுவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--- ராஜ், கிணத்துக்கடவு.

ரோட்டில் கழிவு நீர்

பொள்ளாச்சி, அன்சாரி வீதி பல்லடம் ரோடு சந்திப்பில் சாக்கடை கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடிய படி உள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.-- மணிவண்ணன், பொள்ளாச்சி.

பகலில் ஒளிரும் தெருவிளக்கு

பொள்ளாச்சி, ஆர்.ஆர்., தியேட்டர் ரோட்டில் உள்ள தெருவிளக்கு பகல் நேரத்தில் ஒளிர்ந்தபடியே உள்ளது. இதனால், மின்சாரம் விரயமாகிறது. இதை நகராட்சி நிர்வாகத்தினர் கவனித்து, பகலில் ஒளிர்வதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.- டேனியல், பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி