வெட்டிய மரக்கிளைகளை அப்புறப்படுத்த நேரமில்லை!
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றுவதன் பேரில், அவை அப்புறப்படுத்தாமல் இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கின்றனர்.பொள்ளாச்சி நகரின் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும், அதிக எண்ணிக்கையில் மரங்கள் வளர்க்கப்பட்டு பசுமையாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, ரோட்டோரம், பூவரசு, வாகை, நாவல், வேம்பு, புங்கை என பல்வேறு மரங்கள் காணப்படுகின்றன.ஆனால், பல பகுதிகளில் வணிகக் கடைகள், வீடுகளுக்கு முன் இருக்கும் மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றப்பட்டும் வருகிறது. இந்நிலையில், நேற்று, ஐயப்பன் கோவில் தேரோட்டத்திற்காக, ஆங்காங்கே இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.ஆனால், வெட்டிய மரக்கிளைகள், அப்புறப்படுத்தப்படாமல் அங்கேயே விட்டுச் செல்லப்பட்டன. இதனால், வாகன ஓட்டுநர்கள் பரிதவிக்கின்றனர்.மக்கள் கூறியதாவது:பொள்ளாச்சி நகரின் பல பகுதிகளில், தொடர்ந்து மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன. சில பகுதிகளில் மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டாலும், அவை அந்தந்த பகுதியிலேயே விட்டுச் செல்லப்படுகின்றன.மரங்கள் வெட்டுவதை கண்டறிந்து தடுக்க, வருவாய்த்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், வெட்டிய மரக்கிளைகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.