கூலி உயர்வு கிடைக்கல! விசைத்தறியாளர்கள் வேதனை; கலெக்டரிடம் மீண்டும் முறையீடு
சோமனூர் : திருப்பூர் மாவட்டத்தில் புதிய கூலி உயர்வை, ஜவுளி உற்பத்தியாளர்கள் அமல்படுத்தாததால், விசைத்தறியாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக இருப்பது விசௌத்தறி ஜவுளி தொழில். 95 சதவீத விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன.புதிய கூலி உயர்வு கேட்டு, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர், முதல்வர், அமைச்சர், மற்றும் கலெக்டர்களிடம் மனு அளித்தனர். ஆர்ப்பாட்டம் கருப்பு கொடி ஏற்றி போராட்டங்களை நடத்தினர். ஆனால், அரசு கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, காலவரையற்ற வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்தியதால், பிரச்னைக்கு கடந்த மாதம் தீர்வு காணப்பட்டது. அதன்படி, சோமனூர் ரகத்துக்கு, 15 சதவீதமும், மற்ற பகுதிகளுக்கு, 10 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் முன்னிலையில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கூலி பிரச்னை எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்ட பகுதிகளில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வை அமல்படுத்தவில்லை. இதனால், விசைத்தறியாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதையடுத்து, கூட்டமைப்பு நிர்வாகிகள், கோவை கலெக்டரிடம் இப்பிரச்னைக்கு தீர்வு காண கோரி மனு அளித்தனர்.இதுகுறித்து சோமனூர் சங்க தலைவர் பூபதி கூறியதாவது:கடந்தாண்டு ஜன., முதல் கூலி உயர்வு கேட்டு பல போராட்டங்களை நடத்தினோம். அதன்பின்னர் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டது. ஏப். 21 முதல் கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, சோமனூர் பகுதியில், கூலி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஆனால், பல்லடம், திருப்பூர், தெக்கலூர், அவிநாசி பகுதியில் இதுவரை கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் அமல்படுத்தவில்லை. இதனால், ஏராளமான விசைத்தறியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கோவை கலெக்டர், திருப்பூர் மேயரை சந்தித்து, பிரச்னையை விளக்கி உள்ளோம். ஒப்பந்தப்படி, விரைந்து கூலி உயர்வை வழங்காவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. ஓரிரு நாட்களில் பொதுக்குழுவை கூட்டி விவாதித்து அடுத்த கட்ட முடிவை அறிவிக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.