துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வழிவகை இல்லை: மாநகராட்சி
கோவை; தமிழக முதல்வர் ஸ்டாலினை, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அவரது மனுக்கள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.அதில், 'மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்' என்கிற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார். தலைமை செயலகத்தில் அரசு மட்டத்தில் விவாதிக்க வேண்டிய இந்த கோரிக்கை மனு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை துணை செயலாளர் வாயிலாக, கோவை மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.கோவை மாநகராட்சி கமிஷனர் தரப்பில் இருந்து, 'தமிழகத்தில் உள்ள, 20 மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கேற்ப அளவுகோல் நிர்ணயித்து, ஒரே சீரான பணியிடம் தோற்றுவிக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள பணியிடங்கள் முறைப்படுத்தி, அரசாணை வெளியிடப்பட்டது. இதில், மாநகராட்சிக்கு துாய்மை பணியாளர் பணியிடம் அனுமதிக்கப்படவில்லை. துாய்மை பணியாளர்களை வெளி முகமை வாயிலாக நிரப்ப வேண்டுமென அரசாணையில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஒப்பந்த துாய்மை பணியாளராக பணிபுரிவோரை பணிநிரந்தரம் செய்ய வழிவகை இல்லை' என, பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. இது, ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.