உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இணையத்தில் வருவதெல்லாம் உண்மையில்லை

இணையத்தில் வருவதெல்லாம் உண்மையில்லை

வடவள்ளி; கோவை பாரதியார் பல்கலையில், பாரதியார் நினைவு நாள் விழா நேற்று நடந்தது. 'பாரதி எனும் பாவலன்' என்ற தலைப்பில், பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசுகையில், ''பாரதி, கவிதை மட்டும் எழுதவில்லை. புதுக்கவிதைக்கு வித்திட்டார். பெண்ணுரிமை, நாட்டின் விடுதலைக்காக கவிதை, கட்டுரைகளை எழுதியவர். கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய பாடல்களை, புதுச்சேரியில் இருக்கும்போது எழுதினார். பெண்களுக்கு படிப்பு வேண்டும்; மரியாதை வேண்டும் என்பதை வலியுறுத்தி, கவிதை எழுதினார். டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய செய்தியை, தனது பத்திரிக்கையில் வெளியிட்டதன் மூலம், பாரதியின் பார்வை உலகளாவிய பார்வையாக இருந்தது தெரிய வருகிறது. 39 ஆண்டுகள் மட்டுமே இருந்து, 3 ஆயிரம் ஆண்டுக்கான சேவைகளை செய்தவர் பாரதி. இன்று எல்லாவற்றையும் இணையத்தில் தேடுகின்றார்கள். அதில் வருவது எல்லாம் உண்மையில்லை. பல நுால்களை படித்தால் மட்டுமே, ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள முடியும்,'' என்றார். பதிவாளர் ராஜவேல் வரவேற்றார். தமிழ் துறை தலைவர் தங்கமணி நன்றி கூறினார். துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் துர்கா சங்கர், சிண்டிகேட் உறுப்பினர் ராக் டொமினிக் எக்ஸ்பெடைட் ஜெரோம், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ