உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  3 லட்சம் வாக்காளருக்கு நோட்டீஸ் கூடுதல் ஆவணம் பெறப்படுகிறது

 3 லட்சம் வாக்காளருக்கு நோட்டீஸ் கூடுதல் ஆவணம் பெறப்படுகிறது

: கடந்த 2002 விபரங்களை குறிப்பிடாத வாக்காளர்களுக்கு, நோட்டீஸ் வழங்கி, கூடுதல் ஆவணங்கள் பெறப்பட உள்ளன. அந்தவகையில், திருப்பூர் மாவட்டத்தின் எட்டு தொகுதிகளில், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது. அந்த வாக்காளர்கள், தேர்தல் கமிஷன் பட்டியலிட்டுள்ள 13ல் ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து, தங்கள் ஓட்டுரிமையை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளிலும், அக்டோபர் மாதம் வரையிலான பட்டியலில், 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 பேர் வாக்காளராக இடம் பெற்றிருந்தனர். எஸ்.ஐ.ஆர்., தீவிர திருத்தத்தில், இறந்த, இரட்டை பதிவு, நிரந்தரமாக இடம் பெயர்ந்த வாக்காளர்கள் உள்பட படிவம் பூர்த்தி செய்து வழங்காத, 5.63 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. ஆண்கள் 9 லட்சத்து 83 ; பெண்கள் 9 லட்சத்து 70 ஆயிரத்து 817; திருநங்கைகள், 144 என, மொத்தம் 18 லட்சத்து 81 ஆயிரத்து 144 வாக்காளர்கள், வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு வாக்காளரும், எஸ்.ஐ.ஆர். படிவத்தில், சுய விபரங்கள் மட்டுமின்றி, 2002ல் இடம் பெற்ற வாக்காளரின் விபரம் அல்லது உறவினர்களின் விபரங்களை குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. கணக்கீட்டு படிவத்தில் 2002 விபரங்களை குறிப்பிடாதோர், வரைவு பட்டியல் வெளியானபின் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. வரைவு பட்டியலில் இடம்பெற்றிருந்த 18.81 லட்சம் வாக்காளரில், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், சுய அல்லது பெற்றோரின் 2002 தீவிர திருத்த விபரங்களை பட்டியல் விபரங்களுடன் இணைக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. 2002 விபரங்களை வழங்காத 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு, கூடுதல் ஆவணங்கள் சம்ர்ப்பிக்க கோரி, நோட்டீஸ் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்றுள்ளன. அந்தந்த பி.எல்.ஓ.,க்கள் வாயிலாக வாக்காளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, தேர்தல் கமிஷன் பட்டியலிட்டுள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பெற்று, இணைக்கப்பட உள்ளது. 2002 தீவிர திருத்த விபரங்களை குறிப்பிடாத வாக்காளர்கள், தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை தயார்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும். பி.எல்.ஓ.க்கள் நோட்டீஸ் வழங்கும்போது, அவர்கள் வாயிலாக, கூடுதல் ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். எந்தெந்த ஆவணங்களை வழங்கலாம் என்கிற விபரங்கள், வாக்காளர் வசமுள்ள எஸ்.ஐ.ஆர்., படிவ நகலின் பின்பகுதியில் இடம்பெற்றிருக்கிறது. அதனை பார்வையிட்டு, உரிய ஆவணத்தை இப்போதே தயார்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும் என, தேர்தல் பிரிவினர் அறிவுறுத்துகின்றனர். மீண்டும் பட்டியலில்5.10 லட்சம் பேர் கடந்த 2002ல், திருப்பூர் சட்டசபை தொகுதி, கோவை மாவட்டத்தில் இடம் பெற்றிருந்தது. பல்லடம், பொங்கலுார், அவிநாசி, தாராபுரம், உடுமலையும் தொகுதிகளாக, கோவையுடன் இருந்தன. ஈரோடு மாவட்டத்தில், காங்கயம், வெள்ளகோவில் ஆகியவை, ஈரோடு மாவட்ட தொகுதிகளாக இருந்தன. கடந்த 2009ல், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. தொகுதிகளும் சீரமைக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் தற்போது, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2002 பட்டியலில் இடம்பெற்றிருந்த 5.10 லட்சம் வாக்காளர்கள், தற்போதைய திருப்பூர் மாவட்டத்தின் எட்டு தொகுதிகளுக்கான பட்டியலிலும் இடம்பெற்றிருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது. இவ்விபர பட்டியல் அந்தந்த பி.எல்.ஓ.க்களுக்கு வழங்கப்பட்டு, 2002 பட்டியலில் இடம்பெற்ற வாக்காளர் மற்றும் சார்ந்துள்ளோரின் படிவங்களின் பூர்த்தி செய்யப்பட்டது. வெளிமாவட்டங்களிலிருந்து வந்த வாக்காளர்களும், சொந்த தொகுதியில் இடம்பெற்றிருந்த தங்களது 2002 விபரங்கள் அல்லது பெற்றோரின் விபரங்களை படிவத்தில் குறிப்பிட்டிருந்தனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி