உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உளுந்து விதை பண்ணை; வேளாண் அதிகாரிகள் ஆய்வு

உளுந்து விதை பண்ணை; வேளாண் அதிகாரிகள் ஆய்வு

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ். குளம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உளுந்து பயிரிடப்பட்ட வேளாண் நிலங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.கோவை வடக்கு பெரியநாயக்கன்பாளையம் மற்றும் எஸ்.எஸ்.குளம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட வெள்ளமடை, இடிகரை, அத்திப்பாளையம் கிராமங்களில் நடப்பு பருவத்தில் உளுந்து விதை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. உளுந்து ரகம் 'வம்பன்-11 வல்லுனர்' விதையை ஆதாரமாகக் கொண்டு விதைப்பண்ணை பயிரிடப்பட்டுள்ளது.இந்த ரகம், பிற ரகங்களை விட அதிக மகசூல் தர வல்லது. ஏக்கருக்கு, 400 முதல், 450 கிலோ மகசூல் தரக்கூடியது. மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்பு தன்மை உடையது. குறுகிய கால பயிரிடுகையில் களைகள் ஆரம்ப நிலையில் அகற்றப்பட வேண்டும். நீரில் கரையும் உரமான, 19:19:19 அல்லது தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கண்டுபிடிப்பான பல்ஸ் வொண்டர், 2.25 கிலோ அல்லது பி.ஏ.பி., கரைசலை கைத்தெளிப்பானில் தெளிக்கலாம். 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும்.நன்கு முற்றி காய்ந்த காய்களை அறுவடை செய்து, இரண்டு நாட்கள் நிழலில் உலர்த்தி, மூங்கில் களியால் அல்லது இயந்திரம் வாயிலாக விதைகளை பிரித்து எடுக்க வேண்டும். கல், மண், துாசி காய்ந்த குப்பைகள் இவற்றை நீக்கி, 2.36 மி.மீ., வட்ட கண் சல்லடையால் சலித்து, தரமான விதைகளை சுத்திகரிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு சுத்திகரிப்பு செய்த விதைகளின் ஈரப்பதம், 9 சதவீதம் இருக்க வேண்டும். சேமிப்பிற்கு முன் ஒரு கிலோ விதைக்கு, 2 கிராம் கேப்டான் அல்லது திரம் மருந்து கலந்து துணி பைகளில் சேமித்து வைத்தால், விதையின் தரம், 9 மாதங்கள் வரை குறையாமலும், பூச்சி நோய் தாக்குதல் இல்லாமலும் சேமித்து வைக்க முடியும். விதை பயிர் தற்போது பெய்து வரும் மழையில் பாதிக்காதவாறு உரிய நேரத்தில் விதை பயிரை அறுவடை செய்யுமாறு வேளாண் உதவி இயக்குனர் நமத்துல்லா, விதை சான்று அலுவலர் பாரதி ஆகியோர் அறிவுரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி