பாலங்களில் வெள்ளம் தேங்குவதை தடுக்க அதிகாரிகளுக்கு 12 மணி நேர பொறுப்பு
கோவை: கோவை நகர்ப்பகுதியில் மழை பெய்தால், லங்கா கார்னர், அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் சுரங்கப்பாதை உள்ளிட்ட முக்கியமான சில இடங்களில், தண்ணீர் தேங்குவது வாடிக்கை. அவ்விடங்களில் கூடுதல் மோட்டார்கள் பொருத்தப்பட்டு, மழை நீர் தேங்காத அளவுக்கு உடனுக்குடன் பம்ப் செய்து, வெளியேற்றப்படுகிறது. மழை நீர் தேங்குவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் இடங்கள், மாநகராட்சியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மழை நீரை உடனுக்குடன் அகற்றும் வகையில், 12 மணி நேரத்துக்கு ஒருவர் வீதம், இரண்டு பொறியியல் பிரிவு அதிகாரிகளை, மாநகராட்சி கமிஷனர் நியமித்துள்ளார். லங்கா கார்னர், அவிநாசி ரோடு மேம்பாலம், கிக்கானி ரயில்வே சுரங்கப்பாதை, சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட், காளீஸ்வரா மில் சுரங்கப்பாதை, நீலிக்கோணம்பாளையம் மற்றும் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி சுரங்கப்பாதை, ஆவராம்பாளையம் மற்றும் இருகூர் சுரங்கப் பாதைகளில், தண்ணீர் தேங்கும். மழை பெய்தால் தண்ணீர் வரத்தை கண்காணித்து, அவற்றை உடனுக்குடன் உறிஞ்சி, அப்புறப்படுத்தும் பொறுப்பு உதவி/ இளம் பொறியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. காலை 8 முதல் இரவு 8 மணி வரை ஒரு அதிகாரி, இரவு 8 முதல் மறுநாள் காலை 8 மணி வரை ஒரு அதிகாரி, மேற்கண்ட இடங்களை கண்காணித்து, மழை நீர் தேங்காத வகையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். வரும் 31ம் தேதி வரை, எந்தெந்த அதிகாரி பணிபுரிய வேண்டுமென பட்டியலிட்டு, ஒவ்வொருத்தருக்கும் நகல் அனுப்பப்பட்டுள்ளது.