தனிமையில் வாடும் முதியோரே... இதுவும் கடந்து போகும்! மன அழுத்தத்தால் வருத்தமா... மனது வைத்தால் துரத்தலாம்!
கோவை: மன அழுத்தம் என்பது, இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. முதுமை காலங்களில் வரும் மன அழுத்தத்தை போக்க, வழி சொல்கிறார் மனநல டாக்டர் வெங்கடேஸ்வரன்.முதியோருக்கு, மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம், உடல் நல பிரச்னை, வாழ்க்கை அனுபவம் தளர்வது, வீட்டில் மதிப்பு குறைவதாக நினைப்பது, நண்பர்கள் வட்டம் குறைவது, உடல் ஆரோக்கியம் குறைவு, பொருளாதார பிரச்னை இவற்றால் மனச்சோர்வு, மன அழுத்தம் ஏற்படுகிறது.அதேபோல, வேலையில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் போது, தனது அடையாளம், முக்கியத்துவம் மறைவதாக கருதும் போது, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற உடல் ரீதியான பிரச்னைகள் வரும் போது, முதியவர்கள் பெரும் மனச்சோர்வுக்கு ஆளாகி விடுகின்றனர்.இதைத் தவிர, குடும்பத்துடன் இருக்கும் போதும், சிலர் தனிமையில் இருப்பது போன்று கருதுகின்றனர். அதை விட, முதுமை காலத்தில் வாழ்க்கை துணையை இழக்கும் போது, விரக்தி அடைந்து விடுகின்றனர். இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது.எது நடந்தாலும் கவலையே படக்கூடாது. முதுமை காலத்தை அனுபவிக்க வேண்டும். எதுவும் கடந்து போகும் என மனநிலையோடு வாழ வேண்டும்.குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்ச்சியாகவும், நட்பு வட்டாரங்களுடன் நேரத்தை போக்கியும், சமூக செயல்பாடு, ஆன்மிகம் என்று இருக்கும் போது, மன அழுத்தம் வராது.இவற்றை பின்பற்றியும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடவில்லை என்றால், டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
'குடும்பத்தினர் உதவணும்'
''மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் முதியோரை, குறிப்பாக, துணையை இழந்து வாழ்பவரை, குடும்பத்தினர் அனுசரித்து ஆறுதலாக இருக்க வேண்டும். சிலர் முதுமை காலத்தை கொண்டாடுகிறார்கள். இவர்களுக்கு, மன அழுத்தம் என்ற பேச்சுக்கு இடமிருக்காது.மனச்சோர்வு, மன அழுத்தத்தை போக்க ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியும் அவசியமானது. பழ வகைகள், காய்கறி, கீரை வகைகள், யோகா, நடைபயிற்சி போன்றவை உடல் ரீதியான பிரச்னையை தவிர்ப்பது மட்டுமல்லாமல், மன உளைச்சலில் இருந்தும் விடுபட உதவுகிறது,'' என்கிறார் டாக்டர் வெங்கடேஸ்வரன்.