பழைய தமிழ் சொற்களை பயன்படுத்த வேண்டும்: எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பேச்சு
கோவை; சிறுவாணி வாசகர் மையம் சார்பில், நாஞ்சில்நாடன் விருது வழங்கும் விழா, கோவை ஆருத்ரா அரங்கில் நடந்தது. இந்தாண்டுக்கான விருது எழுத்தாளர் முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டது. எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பேசியதாவது: தமிழில் பல லட்சம் சொற்கள் உள்ளன. சில லட்சம் சொற்களையே பேசுகிறோம்; எழுதுகிறோம். கரி என்றால் ஆண் யானை, பிடி என்றால் பெண் யானை. இந்த தமிழ் சொல்லை இப்போது பயன்படுத்துவதில்லை. மலையாளத்தில் இச்சொல் இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. அங்குள்ள மக்கள் பேசுகின்றனர். பல தமிழ் சொற்கள் மலையாளத்தில் அழியாமல் உள்ளன. பழம் தமிழ் சொற்களை தேடி கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், அவை அழிந்துவிடும். முடிந்தவரை, அரிய தமிழ் சொற்களை கண்டறிந்து பதிவு செய்கிறேன். தமிழில் படிக்க வேண்டிய நுால்கள் ஏராளமாக உள்ளன. திறமையான படைப்பாளர்கள் உள்ளனர். அந்த வரிசையில் விருது பெற்றுள்ள எழுத்தாளர் முத்துக்குமார் படைப்புகளை கருதுகிறேன். இவ்வாறு, அவர் பேசினார். ச ங்கரா கண் மருத்துவமனை தலைவர் டாக்டர் ரமணி, டாக்டர் ராதாரமணி, பேராசிரியர் ஜெயந்த்ஸ்ரீ பாலகிருஷ்ணன், சிறுவாணி இலக்கிய மைய நிர்வாகிகள் பிரகாஷ், சுபாஷினி உள்ளிட்டோர் பங்கேற் ற னர்.